Crime, law and justice
தமிழக அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்
புதுச்சேரி: குடும்பத் தகராறில் சகோதரரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார். அவருக்குக் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 48ம் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் தனது அண்ணன் மரிய குளோத், 45, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரையும், அவரது மனைவி கெரோலினை 42, தாக்கியதாக தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இவ்வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் பெற நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
காட்டமான கேள்வி:: புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், வழக்கினை ரத்து செய்யக் கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா?’ என மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியதுடன், புதுச்சேரி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, வழக்கினை ரத்து செய்யக்கோரித் தாக்கல் செய்த மனுவை அமைச்சர் தரப்பு வாபஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த மாதம் 31ம் தேதிக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதி அளிக்கப்பட்டது.
அடுத்த கட்ட விசாரணை: இதற்கிடையே, இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சேரலாதன் மாகேவுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். கடந்த 31ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஆஜராகவில்லை. அப்போது, சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என, வலியுறுத்தினார். அதனையேற்று, விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், முந்தைய அறிவிப்பின்படி புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன்பாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் அவருக்கு முறைப்படி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினமும் அமைச்சர் மரிய வில்சன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

