எம்பிபிஎஸ் படிக்காமல் சிகிச்சை.. நோயாளிகளின் உயிருடன் விளையாடிய போலி மருத்துவர்.. சிக்கியது எப்படி?

காஞ்சிபுரம் அருகே மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துச் சம்பாதித்து வந்த போலி மருத்துவர் சிக்கி இருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே, பொதுமக்களுக்கு ஒருவர் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. உடனே காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நளினி தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கிளினிக்கை நடத்தி வந்த கலைமணி என்பவரிடம் விசாரித்தனர். அதில் அவர் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பகுதியில் கிளினிக் நடத்தி வந்ததாகவும், அதன் அருகிலேயே கடந்த 10 ஆண்டுகளாக அவரது மனைவி மெடிக்கல் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
அதாவது முதலில் மெடிக்கல் கடையைத் தொடங்கியவர், அருகில் கிளினிக் அமைத்து ஒரு மருத்துவரை பணியமர்த்தி உள்ளார். அந்த மருத்துவர் கிளினிக் வராத நாட்களில் இவரே மருத்துவரை போல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, பணம் சம்பாதித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த மருத்துவர் வேறு மருத்துவமனையில் வேலைக்கு சேர தான் ஆரம்பித்த கிளினிக்கில் தானே போலி மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
