Religion
அமைச்சரின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; பிரதமர் மோடி பங்கேற்று சுவாமி தரிசனம்

புதுடில்லி: டில்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமாக துவங்கியுள்ளது. வட இந்திய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி, டில்லியில் உள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்தார். உலக அமைதி வேண்டியும், நாட்டு மக்களுக்கு செழிப்பும், நல்வாழ்வும் வழங்க வேண்டும் என்று விநாயகரை வழிபட்டார்.
அதேபோல, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அவருக்கு முதல்வரின் மனைவி ஆரத்தி எடுத்து, திலகமிட்டார். அதன்பிறகு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு, அமைச்சர் அமித் ஷா ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினார். அப்போது, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அவருக்கு வெள்ளி விநாயகர் சிலையை பரிசளித்தார்.
நாக்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் கோவில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சுவாமி தரிசனம் செய்தார்.