தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஊடகவியலாளர்கள் பயிற்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, தென்மண்டல பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பொது இயக்குநர் பழனிசாமி தலைமை தாங்கினார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் அருண்குமார் வரவேற்றார். மாவட்டம் முழுதுமிருந்து 65க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சென்னை பி.ஐ.எஸ்., தரச்சான்று நிறுவனத்தின் தென்மண்டல அலுவலக தர மேம்பாட்டு அலுவலர் ஜெயஸ்ரீ, தங்கம், வெள்ளி நகைகளில் உள்ள பி.ஐ.எஸ்., எண்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றில் ஐ.எஸ்.ஐ., சான்றுகளின் உண்மைத்தன்மையை செல்போன் செயலியை பயன்படுத்திட கண்டறிவதன் வழிமுறைகளை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய காளசமுத்திரத்தில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா தலைவர் கண்ணதாசன் கால்நடை வளர்ப்பு மற்றும் தொழில்மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து தென்மண்டல பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பொது இயக்குநர் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
மதிய உணவு இடைவேளைக்குப்பின் நடந்த பயிற்சியரங்கில் எஸ்.பி., ஷாஹ்னாஸ், பேசுகையில், ‘போதை இல்லாத கள்ளக்குறிச்சியை உருவாக்கும் நோக்கில் காவல்துறை பணி செய்து வருகிறது. கல்வராயன்மலை வாழ் மக்களின் வளர்ச்சிக்காக கள்ளச்சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட மக்களின் திருந்தி வாழ பரிந்துரைக்கும் வகையில் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கல்லுாரிகளில் போதை தடுப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், மாவட்டம் முழுவதும் உள்ள 165 பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைத்து கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் காவல்துறையினருடன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் தகவல் பெறப்படுகிறது. மாவட்டம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’ என்றார்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் பாலசுப்ரமணியன் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சேமிப்பு வழிமுறைகள் குறித்து பேசினார்.