Arts, culture, entertainment and media
நெல், மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு: மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அழைப்பு
கடலுார்: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
கடலுார் மாவட்டத்தில் சராசரியாக சம்பா நெல், 95 ஆயிரம் எக்டர், திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவில் மக்காச்சோளம், 24 ஆயிரம் எக்டர் மற்றும் பருத்தி, 2000 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
சிறப்பு பருவத்தில் ெஹச்.டி.எப்.சி., எர்கோ பொது காப்பீடு நிறுவனம் பிரதம மந்திரி காப்பீடு இத்திட்டத்தை இம்மாவட்டத்தில் செயல்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர்.
கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் அல்லது வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்தாண்டு சூப்பர் எல்நினோ பருவ மாற்றம் காரணமாக பருவ மழை குறைவாக பெய்யக் கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்ய பயிர் காப்பீடு செய்வது அவசியம்.
பிரீமியம் தொகையாக சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.584, பருத்திக்கு ரூ.464 செலுத்த வேண்டும். இதற்கான பிரீமியம் செலுத்த கடைசி நாள் நவ., 16ம் தேதி ஆகும். மக்காச்சோள பயிருக்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ 399 செலுத்த வேண்டும். இதற்கு பிரீமியம் செலுத்த கடைசி நாள் அக்., 31ம் தேதி ஆகும்.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், சிட்டா மற்றும் வி.ஏ.ஓ., வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல், ஆதார் எண் இணைக்கப்பட்ட மற்றும் இ.கே.ஒய்.சி., பூர்த்தி செய்த வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.