சிவகங்கை அருகே கார் விபத்து இருவர் பலி: 3 பேருக்கு சிகிச்சை

சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடியில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். மூன்று பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.
சிவகங்கை சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் 39, நேரு பஜார் ஷேக் முகமது 38, காமாட்சி அம்மன் கோவில் தெரு வெங்கட சுப்பிரமணியன் 39, வீரமாகாளியம்மன் கோவில் தெரு தேவா 26, மதுரை முக்கு பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் 39.
இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு சிவகங்கையில் இருந்து காளையார்கோவிலுக்கு காரில் சென்றனர்.
காரை தேவா ஓட்டினார். கொல்லங்குடி அருகே சென்றபோது மரத்தில் கார் மோதியது. இதில் கார்த்திகேயன், ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெங்கட சுப்பிரமணியன், தேவா, விக்னேஸ்வரன் மூவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.