Arts, culture, entertainment and media
பாரதியாரும்... பாப்பையாவும்... இருவரின் வாழ்விலும் மறைவிலும் உள்ள ஒற்றுமை!

பாரதியார் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பாரதியார் மறைந்த அதே நாளில் காலமானார். சாலமன் பாப்பையாவின் வாழ்வில் பாரதியார் எவ்வாறு கலந்திருந்தார்?
பாரதியாரின் வரிகளை சாலமன் பாப்பையா மேற்கோள்காட்டாத பட்டிமன்றங்களே இல்லை எனும் வகையில், பாரதியாரின் வரிகளை மனதில் நிறுத்தி வாழ்ந்தவர் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. அவரின் முதல் மேடைப் பேச்சே பாரதியார் பற்றியதுதான். 1961-இல், புதுக்கோட்டையில் நடந்த விவாத அரங்கில் “பாரதி புதுமைக் கவிஞனே” என்ற தலைப்பில் பேசினார்.
இப்படி, தனது நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த பாரதியாரின் நினைவு நாளிலேயே, சாலமன் பாப்பையாவும் மண்ணைவிட்டு மறைந்துள்ளார். இருவரது வாழ்விலும் மறைவு ஒன்றுமட்டும் ஒற்றுமையல்ல, பல ஒற்றுமைகள் உள்ளன. புதுக்கவிதை வடித்து தமிழ் இலக்கியத்திற்கு புதிய திசையை பாரதியார் காட்டியதுபோல, பட்டிமன்றக் கலையை பாமர மக்களுக்கானதாக மாற்றிய பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா.
தனது எழுத்துகளால் புரட்சிகர கருத்துகளை பாரதியார் பரப்பியதைப் போல, அவரது வழிவந்த சாலமன் பாப்பையா, தனது பேச்சாற்றலால் ஆழமான சமூக கருத்துகளையும், நகைச்சுவை உணர்வு கலந்து எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். பெண் விடுதலைக்கு பாரதியார் முக்கியத்துவம் அளித்ததைப் போலவே, பட்டிமன்ற தீர்ப்புகளிலும் பெண்கள் பக்கமே நின்றவர் சாலமன் பாப்பையா என பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் நினைவுகூர்ந்தார்.
பாரதியார் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்த சாலமன் பாப்பையா, தனது இறுதி நாட்களில் பாரதியாரின் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுதி முடித்தார். அதை வெளியிடுவதே அவரின் கடைசி ஆசையாக இருந்த நிலையில், ஆசை நிறைவேறாமலேயே மறைந்துவிட்டார். மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை, தன்னுடைய தனித்துவமான வழியில் அடுத்த தலைமுறைக்கு கடத்திய சாலமன் பாப்பையா என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்பதில் ஐயமில்லை.
