Lifestyle and human interest
அறிவிக்கப்படாத மின்தடையால் இருளில் மூழ்கும் மலை கிராமங்கள்
தாண்டிக்குடி:தாண்டிக்குடி மலைப்பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கீழ்மலை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு கொடைக்கானல் துணை மின் நிலையம் மூலம் மின் சப்ளை வழங்கப்படுகிறது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் இருந்த போதும் காலி பணியிடங்களால் அவ்வப்போது ஏற்படும் மின்தடையை சீர் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
அடர்ந்த வனப்பகுதி வழியாக வரும் மின்பாதைகளில் அவ்வப்போது இடையூறுகள் ஏற்படுகிறது. கொடைக்கானல் சப்ளையில் பிரச்னை ஏற்படும் நிலையில் மாற்று சப்ளையாக வத்தலக்குண்டு, செம்பட்டியில் இருந்து வழங்குவது வழக்கம்.
இரு வாரமாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. மறுநாள் காலை சில மணி நேரங்கள் மட்டுமே மின் சப்ளை வந்து பின் மின்தடை தொடர்கிறது. பகல் முழுமையும் அறிவிக்கப்படாத மின்தடை நீடிப்பதால் அவதிப்படுவதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாதாந்திர பராமரிப்பு பணிகளின் போது மின் பாதையில் உள்ள இடையூறுகளை அகற்றிய போதும் சில வாரங்களாக இரவில் மின்தடை நீடிக்கிறது. இது குறித்து மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
ஊத்து பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து அதற்கான பணிகள் இன்னும் துவங்காத நிலை உள்ளது. துணை மின் நிலையம் அமையும் வரை மின்தடை பிரச்னைக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தாண்டிக்குடி கீழ்மலை பகுதிக்கு மின் சப்ளையளிக்கும் 3 வழித்தடங்களிலும் இடையூறு ஏற்பட்டுள்ளன. பழுது நீக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தடையின்றி மின்சாரம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.