Weather
ஊட்டியில் இரண்டாம் நாளாக கனமழை: கால நிலை மாற்றத்தால் கடும் குளிர்

ஊட்டி: ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் இரு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நடபாண்டில் கோடமழை மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. எல் நினோ தாக்கத்தால் வறட்சியான காலநிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக ஊட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால், தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்களில் ஓரளவுக்கு ஈரப்பதம் ஏற்பட்டு இருப்பதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த இரு நாட்களாக, ஊட்டி மற்றும் தாவணெ சுற்று வட்டார பகுதிகளில், கனமழை பெய்தது. அங்குள்ள பிரதான நீரோடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் மழை கொட்டி தீர்த்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காலநிலை மாற்றத்தால், ஊட்டியில் இரவில் கடும் குளிர் நிலவுகிறது.