Politics
அமலாக்க அதிகாரிகளுக்கு துறை இயக்குநர்.. திடீர் தடை! : அமைச்சர் சதீஷ் வீட்டு சோதனை ஆவணங்கள் வெளியாகக்கூடாது

பெங்களூரு: 'பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் நடந்த சோதனை தொடர்பான ஆவணங்கள், தகவல்கள் வெளியாக கூடாது' என்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு, அத்துறையின் இயக்குநர் ராகுல் நவீன் திடீர் தடை விதித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பொதுப்பணி துறை அமைச்சராக சதீஷ் ஜார்கிஹோளி உள்ளார். தொழில் அதிபரான இவர், சர்க்கரை ஆலை உட்பட பல தொழில்கள் நடத்துகிறார்.
இந்நிலையில் சதீஷ் ஜார்கிஹோளி, அவரது மகளும், சிக்கோடி காங்கிரஸ் எம்.பி.,யுமான பிரியங்கா, மகன் ராகுல், ஆதரவாளர்கள் வீடுகளில், கடந்த 9, 10ம் தேதிகளில் ஈ.டி., எனும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
தங்கச்சுரங்கம் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆப்ரிக்காவில் உள்ள தங்க சுரங்க நிறுவனத்தில், சதீஷ் ஜார்கிஹோளி பங்குதாரராக இருப்பது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதவிர பொதுப்பணி துறையில் பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில், முறைகேடு நடந்தது பற்றியும் கூறப்பட்டு இருந்தது. ஆனால், இதனை அமைச்சர் மறுத்தார். தங்க சுரங்கத்தில் பங்குதாரராக இருப்பது பற்றி ஆவணங்களுடன் நிரூபிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் தலைமையிலான தொழில்நுட்ப குழு கடந்த 12ம் தேதி பெங்களூரு வந்தனர். சதீஷ் ஜார்கிஹோளி சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்திய சோதனை; சிக்கிய ஆவணங்கள் குறித்து முழு தகவல்கள் பெற்றனர். மற்ற வழக்குகளில் உள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு, ராகுல் நவீன் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் நடந்த, சோதனை தொடர்பான ஆவணங்கள், தகவல்கள் எக்காரணம் கொண்டும் வெளியாக கூடாது. அப்படி நடந்தால் சதீஷ் தரப்பு எச்சரிக்கையாகி விடும். ஆவணங்களை அழிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அவர் செய்த சட்டவிரோத பண பரிமாற்றம், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி கூடுதல் தகவல்களை சேகரித்து வையுங்கள்.
கைதாக வாய்ப்பு பொதுப்பணி துறையில் யார், யாருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கும், அமைச்சருக்கும் என்ன தொடர்பு என்றும் பாருங்கள் என்பது உட்பட, பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தப்பி தவறு ஆவணங்கள் ஏதாவது வெளியாகி, அமைச்சர் தரப்பு உஷாராகி விட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே நேரடி பொறுப்பு என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் சதீஷ் மீதான அமலாக்கத்துறையின் பிடி இறுகியுள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜராகும் போது, சரியான தகவல்கள், ஆவணங்களை வழங்கவில்லை என்றால், அவரை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது.
மாநில அரசியலில் கோலோச்சும் எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த சதீஷ் மீது, அமலாக்கத்துறை ஏதாவது அதிரடி நடவடிக்கை எடுத்தால், அது காங்கிரசுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதனால் சதீஷுக்கு ஆதரவாக நிற்கும்படியும், பா.ஜ., தான் அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது என்பதை, எஸ்.டி., மக்கள் முன்பு கொண்டு செல்லும்படியும், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு, கட்சி மேலிடமும் உத் தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பெங்களூரு வரும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரும், சதீஷ் விவகாரம் குறித்து முதல்வர் சிவகுமாருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.