போலீசார் நலனை பாதுகாக்க காவல் குடும்பம் திட்டம்
சென்னை: போலீசார் குடும்பத்தினரின் நலனை பாதுகாக்க, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் மனைவியர் பங்கேற்புடன், 'காவல் குடும்பம்' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து, காவல் துறை அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
போலீஸ் அதிகாரிகளின் மனைவியர் பங்கேற்புடன், 'காவல் குடும்பம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில், கூடுதல் டி.ஜி.பி.,க்கள், சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள், கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆகியோரின் மனைவியர் உறுப்பினர்களாக இருப்பர்.
இவர்கள், செயற்குழுவையும், பல்வேறு பிரிவுகளுக்கான தலைவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். போலீசார் குடும்பங்களின் ஒட்டுமொத்த நலன் காப்பதுடன், அது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே இக்குழுவின் நோக்கம்.
மாநில அளவில் அமைக்கப்படும் செயற்குழுவை போலவே, மாவட்டங்கள் மற்றும் பிற நகரங்களில் உள்ள, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள், கூடுதல் எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரின் மனைவியர் செயற்குழு அமைத்துக் கொள்ளலாம்.
'ஒன்றாய் பாதுகாப்போம்; ஒன்றாய் வளர்வோம்; ஒன்றாய் வலுப்பெறுவோம்' என்ற நோக்கத்துடன் தொடங்கப்படும், காவல் குடும்பம் திட்டத்தில், போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உடல், மனம், கல்வி வளர்ச்சி, சுற்றுச்சூழல், கலாசாரம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.