Arts, culture, entertainment and media
இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக்கோரி மனு தாக்கல்

இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக் கோரிய சரிகமா மனு குறித்து பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி சரிகமா நிறுவனம் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்க இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சரிகமா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி சரிகமா உரிமை கோரும் சில பதிப்புரிமை பெற்ற படைப்புகளுக்கு உரிமை கொண்டாடவோ, பயன்படுத்தவோ, பிறர் பயன்படுத்த உரிமம் வழங்கவோ கூடாது என இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்ததாகவும்,
அந்த உத்தரவை மீறி, முரட்டுக் காளை படத்தில் வரும் பொதுவாக என் மனசு தங்கம் பாடலை பயன்படுத்த தன்னிடம் உரிமை பெற வேண்டும் என பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மே மாதம் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறைத்து பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றதாகவும், பின்னர் மேல்முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தடை ஆணையை திறம்பப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இளையராஜாவை சிறையில் அடைக்கவும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்து இழப்பீடு வழங்க உத்தரவிடவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜா பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
