ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வாக்குவாதத்தால் பரபரப்பு

உடுமலை: உப்பாறு ஓடை ஆக்கிரமிப்பு அகற்றுவதில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அதிகாரிகள் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி பகுதியில் உப்பாறு ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையை ஆக்கிரமித்து, தனியார் கோழிப்பண்ணை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அளவீடு பணிகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் உடுமலை தாசில்தார் அருணா தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.
ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் அகற்றும் பணி துவங்கியது. அப்போது ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அனைத்து வகை கட்டுமானங்களையும் அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விரைவில் அனைத்து வகை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.