Politics
ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

தவெக பெண் நிர்வாகி குற்றம்சாட்டிய பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகியோர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் த.வெ.க முன்னாள் பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம். வழக்கில் புகார்தாரரான பெண் சமரசமாக செல்வதாக நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக இருந்து வந்தார். தவெக பெண் நிர்வாகி கடந்த மே 3 ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாக கூறி பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் பெண்ணின் புகார் ஜூன் 1 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தவெக பெண் நிர்வாகி குற்றம்சாட்டிய பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகியோர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதும் குற்றச்சாட்டு எழுந்தது; ஆனால், எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டை மறுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, இருவருக்கு மட்டுமே தொடர்பு என உறுதி செய்தது.
இந்நிலையில், புகார் அளித்த பெண்ணும், கைதான இருவரும் சமரசமாக செல்வதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை அமர்வு, புகார்தாரர் சமரசமாக செல்ல முடிவு செய்திருப்பதால், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
