Politics
'அனைவருடனும் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்..' - டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி...

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் இனியும் தாமதம் செய்ய முடியாது – பிரதமர் மோடி
பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எந்த அமைப்புக்கும் எதிரானது அல்ல என்றும் அனைவருடன் இணைந்தே செயல்பட விரும்புவதாகவும் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டை டெல்லியில் இன்று தொடங்கி வைத்து தெரிவித்துள்ளார்.
மேலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளும் நாடுகளுக்கு, உலகளாவிய ஆளுகை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரங்களில் உரிய பங்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
2 நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மூடிய கதவு கூட்டங்கள், கண்காட்சி மற்றும் பிரதமர் மோடி வழங்கும் சிறப்பு இரவு விருந்து ஆகியவை இன்று நடைபெறுகின்றன.
கூட்டணி நாடுகள் மற்றும் அழைக்கப்பட்ட தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் (Open Session) மற்றும் கூட்டுப் பிரகடனம் நாளை வெளியிடப்பட்டு உச்சிமாநாடு நிறைவடையும்.
உச்சிமாநாட்டின் தொடக்க உரையில் பேசிய பிரதமர் மோடி, தெற்குலக நாடுகள் (Global South) சர்வதேச அமைப்புகளில் முன்னணி வரிசையில் அமர்ந்திருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரங்களில் இன்னும் பின்வரிசையிலேயே தள்ளப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
"இந்த 'முன்னுரிமைப் பிரமிடை' நாம் 'கூட்டாண்மைக்கான தளமாக' (Platform of Partnership) மாற்ற வேண்டும். அங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் குரல் கொடுக்க உரிமை இருக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் பங்கு இருக்க வேண்டும், மேலும் மனிதகுலத்தின் முன்னேற்றமே ஒவ்வொரு முயற்சியின் மையமாகவும் இருக்க வேண்டும்," என்று அவர் தனது உரையில் கூறினார்.
பிரிக்ஸ் அமைப்பின் அடுத்த உச்சிமாநாட்டிற்கு முன்பாக உலகளாவிய ஆளுகை சீர்திருத்தங்களுக்கான வரைபடத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் முன்மொழிந்தார். இதற்காக 10 முக்கிய முன்மொழிவுகளை வரைவு செய்ய யோசனைத் தெரிவித்த அவர், இந்தச் சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய தூண்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்:
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UN Security Council) சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் இனியும் தாமதம் செய்ய முடியாது என்று உறுதியாகத் தெரிவித்த பிரதமர், இது தொடர்பான உரையாடல்கள் தெளிவான காலக்கெடு மற்றும் உறுதியான முடிவுகளுடன் பிணைக்கப்பட வேண்டும் என்றார்.
அதேபோல், சர்வதேச நிதி நிறுவனங்களில் (International Financial Institutions) வாக்களிக்கும் உரிமை, தலைமைப் பதவிகள் மற்றும் கொள்கை முன்னுரிமைகள் ஆகியவை தற்போதைய உலகப் பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
