ஏலக்காய் விலை உயர்வால் ஏலத் தோட்டங்களுக்கு கிராக்கி
கம்பம், செப். 12 ஏலக்காய் கிலோ ரூ.3 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் ஏலத் தோட்டங்களின் விலை விறுவிறுவென உயர்துள்ளது.
ஏலக்காய் கிலோ ரூ.3 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் ஏலத் தோட்டங்களின் விலை விறுவிறுவென உயர்துள்ளது.
சர்வதேச அளவில் தரமான ஏலக்காய் உற்பத்தி செய்யும் பகுதியாக இடுக்கி மாவட்டம் உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பீர்மேடு, உடுப்பன்சோலை, தேவிகுளம் தாலுகாக்களில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. இங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களும், கேரளாவை சேர்ந்தவர்களும் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏலக்காய் விலை தற்போது கிலோ சராசரியாக ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் குவிவதால், விலை இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஏலத்தோட்டங்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயரத் துவங்கி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏக்கர் ரூ.30 லட்சம் ஆக இருந்தது. தற்போது ஏக்கர் ரூ.1 கோடியை தொட்டுள்ளது. இதனால் ஏலத்தோட்டங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஏல விவசாயிகள் கூறுகையில், ‘சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏக்கர் ரூ.30 லட்சத்திற்கு விலை போனது. தற்போது ஏக்கர் ரூ60 லட்சம் முதல் 80 லட்சமாக உள்ளது. ரோடு, தண்ணீர் வசதி, ஸ்டோர் ரூம், காய்க்கும் நிலையில் நல்ல செடிகள் இருக்கும் பட்சத்தில் ஏக்கர் ரூ.1 கோடி வரை கிடைக்கிறது.’ என்றனர்.