தேயிலை தோட்டத்தில் 7 மாத சிசு சடலம் மீட்பு
குன்னூர்: குன்னூரில் தேயிலை தோட்டத்தில், 7 மாத சிசு சடலம் மீட்கப்பட்டது. தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
குன்னூரில் தேயிலை தோட்டத்தில், 7 மாத சிசு சடலம் மீட்கப்பட்டது. தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் முசாரிபுரி பகுதி தேயிலை தோட்டத்தில் நேற்று காலை தோட்ட மேற்பார்வையாளர் வழக்கமான பணிகளை பார்வையிட சென்றார். அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே மண்ணில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு ஒன்றின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தோட்ட நிர்வாகம் தரப்பில் உடனடியாக கொலக்கம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சுமார், 7 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்த பெண் சிசு என்பதும், சிசுவை மண்ணில் லேசாக புதைத்து சென்றதாகவும், நாய்கள் அந்த சடலத்தை தோண்டி வெளியே இழுத்து போட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டு குழந்தை வீசப்பட்டதா அல்லது குறைப்பிரசவத்தில் இறந்ததால் புதைத்து சென்றனரா என்ற கோணத்திலும், இப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களின் விவரங்களும் சேகரித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.