Arts, culture, entertainment and media
அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 3' திரைப்படத்தை வெளியிட தடை - நீதிமன்றம் உத்தரவு!

அருள்நிதியின் 'டிமாண்டி காலனி 3' படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒப்பந்த விதிகளை மீறியதால், ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் வழக்கு தொடர்ந்தது.
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான 'டிமாண்டி காலனி 3' திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்துவும், 'ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் ஏ. விஜயா சுப்பிரமணியனும் இணைந்து கடந்த 2023 ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்காக ஒப்பந்தம் செய்திருந்தனர்.
ஒப்பந்தத்தின்படி, 'டிமாண்டி காலனி-2 மற்றும் அதன் தொடர்ச்சியான பாகங்களான 'டிமாண்டி காலணி-3 டிமாண்டி காலனி-4 உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களுக்கும் இரு தரப்பினரும் பங்குதாரர்களாக கொண்ட நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தனக்கு தெரியாமல் 'டிமாண்டி காலனி 3' படத்தை பேஷன் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து, அந்த நிறுவனத்தின் பெயரில் தணிக்கை சான்று பெற்று, ஓடிடி தளத்துக்கு விற்பனை செய்து விதிகளை மீறியுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி 'ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் ஏ. விஜயா சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
படத்தின் வெளியீடு மற்றும் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் சமரச தீர்வு மையத்தை அணுகலாம் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதால், அதன்படி இந்த விவகாரத்தில் சமரச தீர்வு காணும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, 'டிமாண்டி காலனி 3' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு தொடர்பாக இயக்குனர் அஜய் ஞானமுத்து 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
