நேபாள வாலிபர் கொலை மேலும் ஒருவர் கைது
சூலூர்: பாப்பம்பட்டியில் நேபாள வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நேபாள நாட்டை சேர்ந்த ராமேஸ்வர் ஷா,28, சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் தங்கி, எம்.என்.சி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 7 ம்தேதி நந்தினி நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
ராமேஸ்வர் ஷாவுடன் தங்கியிருந்த ஜெகதீஷ், மத்யாஸ் மால்டு ஆகிய இருவரும் சேர்ந்து ராமேஸ்வர் ஷாவை கொலை செய்தது தெரிந்தது. ஜெகதீஷின் உருவம் குறித்து, ராமேஸ்வர் ஷா கேலி செய்ததுதான் கொலைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. மத்யாசை கைது செய்த சூலூர் போலீசார், ஜெகதீசை தேடி வந்தனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ஜெகதீஸை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.