Sport
தேசிய மல்லர் கம்பம் போட்டிக்கு விழுப்புரம் மாணவர்கள் தேர்வு
விழுப்புரம்: தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் விளையாட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டையில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயோன மல்லர் கம்பம் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழக அணி சார்பிலான அணிகள் தேர்வு சமீபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த தேர்வு போட்டியில், தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த மல்லர் கம்பம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 14 வயதிற்கு உட்பட்டோர், 17, 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் மூன்று பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மல்லர் கம்பம் கழகம், விளையாட்டு விடுதி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பயிற்சி பெறுவோர், மல்லர் கம்பம் கிளப் பயிற்றுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில், தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டிக்கு மொத்தம் 24 பேர் தேர்வாகினர். அதில், 16 மாணவ, மாணவிகள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு மல்லர்கம்பம் பயிற்சியாளர்களும் சென்றிருந்தனர். தேசிய போட்டிக்கு தேர்வாகி விழுப்புரம் மாவட்த்திற்கு பெருமை சேர்த்துள்ள மல்லர் கம்பம் மாணவர்களை, விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் செயலாளர் ஜனார்த்தனன், செயல் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி, பாராட்டினர்.