Politics
மோடி - அதானி பாணியில் விஜய் ஆட்சி?; விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?-பொளந்து கட்டும் இள.புகழேந்தி

அரசியல் தலைவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது அரசு அதிகாரிகளை விடுத்து, தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட் நபர்களையும் தொழிலதிபர்களையும் அழைத்துச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இது அரசுப் பணத்தில் தனிநபர்களின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்புகிறது. தற்போதைய தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணத்திலும் அத்தகைய ஒரு நபர் உடன் சென்றிருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எப்படி ஆஸ்திரேலியா சென்றபோது, இந்திய நாட்டிற்கான ஒப்பந்தங்களை விடுத்து தமக்கு நெருக்கமான அதானியை உடன் அழைத்துச் சென்று, அங்குள்ள நிலக்கரி சுரங்கங்களை அதானி கம்பெனிக்கு வாங்கிக் கொடுத்தாரோ, அதே போன்ற ஒரு துரோக வேலையைத்தான் தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் விஜய் செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் விஜய்க்கு ஆந்திராவைச் சேர்ந்த கார்ப்பரேட் தொழிலதிபரான விஷ்ணு ரெட்டி என்பவருடன் நீண்ட கால நெருங்கிய பழக்கம் உள்ளது.
குவாரிகள் மற்றும் பல்வேறு கார்ப்பரேட் தொழில்களை கவனித்துக் கொள்ள விஜயே இவருக்கு பல ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து வருகிறார்.இந்த நெருக்கம் எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்றால், முதலமைச்சர் லண்டன் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது, விஐபி வழித்தடம் வழியாக விஷ்ணு ரெட்டியையும் உடன் அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் பாஸ் இல்லாத காரணத்தால் விஷ்ணு ரெட்டியை அனுமதிக்க மறுத்து, பொதுமக்கள் செல்லும் பொது வழித்தடம் வழியாக வருமாறு கூறினர்.
உடனே கோபமடைந்த முதலமைச்சர் விஜய், 'என்னோடு வருபவருக்கு மரியாதை இல்லை என்றால் எனக்கு என்ன மரியாதை?' என்று கூறி, விஐபி வழித்தடத்தைப் புறக்கணித்துவிட்டு தானும் பொது வழித்தடம் வழியாகவே நடந்து சென்றார். அரசு பூர்வமாக தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் ஒரு பயணத்தில் இந்த விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? லண்டனில் ஈர்க்கப்படும் தொழில் முதலீடுகளில் விஷ்ணு ரெட்டிக்கு பார்ட்னர்ஷிப் கொடுப்பதற்கும், அவரது தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்குமாகவே முதலமைச்சர் இந்த நாடகத்தை ஆடுகிறார்.
இதோடு மட்டுமல்லாமல், லண்டனில் தற்செயலாக நடிகை திரிஷாவைச் சந்தித்ததாகக் கூறுவதும் ஒரு திட்டமிட்ட கூத்துதான். திரிஷா மூன்று நாட்களுக்கு முன்பே அங்கு சென்றுவிட்டார். அரசுப் பயணம் என்ற போர்வையில் தன் நெருங்கிய சகாக்களுக்குப் பலன் சேர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் செயல்படுகிறார். தான் எதைச் செய்தாலும் தனது ரசிகர்கள் கைதட்டுவார்கள், எதையும் தாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் முதலமைச்சர் பதவிக்குரிய எந்த ஒரு தகுதியும் இல்லாமல் விஜய் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)