Politics
லண்டன் பயணம் முதலீட்டை ஈர்க்கவா அல்லது கார் ரேஸை பார்க்கவா?- வெடிக்கும் இள.புகழேந்தி

தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மைகள் குறித்து தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அரசு தரப்பில் இது தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதிகாரப்பூர்வப் பயணம் எனக் கூறப்பட்டாலும், எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இதனை உல்லாசப் பயணம் என்றும், குறிப்பிட்ட சில தனிநபர்களுக்கான பயணம் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"முதலமைச்சர் லண்டன் பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்றும், அங்கு மேம்பட்ட உற்பத்தி வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போவதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் முரசொலியில் 'பொய் பயணம்' என்று கட்டுரை போடும் அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. பொதுவாக ஒரு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்கிறார் என்றால், அதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வப் பயணமாக இருந்தால், தொழில் துறை செயலாளர்கள் உடன் சென்றிருக்க வேண்டும். ஆனால், இந்த லண்டன் பயணத்தில் தொழில்துறை செயலாளர் கூட முதலமைச்சருடன் செல்லவில்லை. இது சென்னையிலேயே தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்ட முறையான பயணம் அல்ல. இது ஒரு திடீர் பயணம். இந்த பயணத்தின் உண்மையான ரகசியத்தை நடிகர் அஜித்தே வெளிப்படையாக உடைத்துவிட்டார். லண்டனில் தான் பங்கேற்கும் கார் ரேஸைப் பார்க்க வருமாறு அஜித் அழைத்ததாகவும், அதற்கு விஜய் உடனடியாக ஒப்புக்கொண்டு லண்டன் வர சம்மதித்ததாகவும் அவரே கூறியுள்ளார்.
அஜித்தின் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காகவே இந்த லண்டன் பயணம் திட்டமிடப்பட்டது. அந்தத் தனியார் ரசனைப் பயணத்திற்கு அரசுப் பணத்தை செலவழிப்பதற்காக, 'தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போகிறேன்' என்ற ஒரு பொய்யான காரணத்தை முதலமைச்சர் விஜய் மக்கள் மத்தியில் கூறுகிறார். அரசு செலவில் வெளிநாடு சென்று, அஜித்தின் கார் ரேஸுக்குக் கை தட்டிவிட்டு, அங்கு கோட் சூட் அணிந்து போஸ் கொடுப்பதற்காகவா தமிழக மக்கள் இவருக்கு ஓட்டுப் போட்டார்கள்? தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதாரம் நாசமாகப் போவதைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. ஏற்கனவே பரந்தூர் விமான நிலையப் பிரச்சனை காரணமாக, தமிழகத்திற்கு வரவிருந்த லட்சக்கணக்கான ரூபாய் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டன.
அதனைப் பற்றி கவலைப்படாமல், முறையான அரசு அதிகாரிகள் இல்லாமல் லண்டன் சென்று உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாசமாக இருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே, இவருடைய லண்டன் பயணம் என்பது முற்றிலும் ஒரு பித்தலாட்டமும் பொய்யான பயணமும் ஆகும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)