Politics
7.8% ஆக அதிகரித்த ஜி.டி.பி..! - ரீல் வளர்ச்சியா... ரியல் வளர்ச்சியா?

, “ஜி.டி.பி வளர்ச்சி 7.8 சதவிகிதம் என்பது உண்மை கிடையாது” என்று சொல்லி பா.ஜ.க-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தார் மோடி அரசில் நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க்.
“இந்தியாவின் ஜி.டி.பி 7.8 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது” என்ற செய்தி பா.ஜ.க-வினரை புளகாங்கிதமடையச் செய்திருக்கிறது. அதேநேரம், “இது மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரம்” என்றும், “உண்மையான வளர்ச்சி விகிதம் 2.6 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும்” என்றும் முன்வைக்கப்படும் விமர்சனம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
“நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.8 சதவிகிதமாக இருந்தது” என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. உடனே, “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சம் பெற்றுவிட்டது” என்று பா.ஜ.க-வினர் துள்ளிக் குதித்தனர்.
“இந்தியா பூத்துக் குலுங்குகிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருகிறது. உலக விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சவால்களையெல்லாம் தாண்டி, இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சியை அடைந்துவருகிறது” என்றார்.
இந்த நிலையில், “ஜி.டி.பி வளர்ச்சி 7.8 சதவிகிதம் என்பது உண்மை கிடையாது” என்று சொல்லி பா.ஜ.க-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தார் மோடி அரசில் நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க். மேலும், “கடந்த ஆண்டின் ஜி.டி.பி மதிப்பான ரூ.86.05 லட்சம் கோடியுடன், நடப்பு ஆண்டின் ரூ.88.27 லட்சம் கோடியை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவின் உண்மையான ஜி.டி.பி 2.6 சதவிகிதமாக அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்கும். மத்திய அரசு, தரவுகளில் குளறுபடி செய்திருக்கிறது” என்று அவர் குற்றம்சாட்டுகிறார். மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியனும் இதே விமர்சனத்தை முன்வைக்கிறார்.
இந்தக் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதாவது, “கடந்த ஆண்டில் குறிப்பிடப்பட்ட ரூ.86.05 லட்சம் கோடி என்பது, 2011-12 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்ட பழைய மதிப்பீடாகும். ஆனால், 2022-23 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக்கொண்ட புதிய கணக்கீட்டு முறை, 2026 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தரவு ஆதாரங்கள், தொழில்துறை உற்பத்திக் குறியீடு உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டதால், இந்த மதிப்பு ரூ.80 லட்சம் கோடியாக மாறியிருக்கிறது. மற்றபடி, பொருளாதார வளர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்காகவோ, அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவோ அந்த மதிப்பு குறைக்கப்படவில்லை” என்று மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
இந்த நிலையில், ஜி.டி.பி தொடர்பான சர்ச்சை குறித்து மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், பொருளாதாரப் பேராசிரியருமான ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். “ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்றால், தனியார் முதலீடு, மின்சாரத்தின் பயன்பாடு, ஏற்றுமதி உட்பட மற்ற பொருளாதாரக் குறியீடுகளும் அந்த வளர்ச்சியை நோக்கி நகரும். ஆனால், அப்படியான வளர்ச்சி இப்போது இல்லை.
உண்மையிலேயே ஜி.டி.பி வளர்ந்திருக்கிறது என்றால், வெளிநாட்டு முதலீடு இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறுவது ஏன்... இந்தியாவில் தனியார் முதலீடுகள் அதிகரிக்காதது ஏன்... நாட்டில் வேலையின்மை அதிகரித்திருப்பது ஏன்... எனவே, 7.8 சதவிகித வளர்ச்சி என்பதில் உண்மை இல்லை. ஜி.டி.பி-யைக் கணக்கீடு செய்யும் தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று விமர்சிக்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இது குறித்து, பொருளாதார நிபுணரும், பா.ஜ.க தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவின் மாநிலத் தலைவருமான அர்ஜுன மூர்த்தியிடம் பேசினோம். “சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்துவருகிறது. மொத்த உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்டவற்றை அடிப்படையாகவைத்து ஜி.டி.பி-யை கணக்கிடுகிறார்கள். எனவே, 7.8 சதவிகிதம் என்பது உண்மையான பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. ஜி.டி.பி வளர்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஜி.எஸ்.டி வசூலையும் நாம் பார்க்க வேண்டும். கடந்த மாதத்திலும்கூட, ஜி.எஸ்.டி வருவாய் மிக உயர்ந்த அளவில் இருந்திருக்கிறது.
சீனாவில்கூட ஜி.டி.பி வளர்ச்சி குறைந்திருக்கிறது. அங்கு உற்பத்தி குறைந்து, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்திருக்கிறது. ஆனால், உற்பத்தியை மையமாகக்கொண்டு வளரக்கூடிய ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது. அதனால், இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அரசியல்ரீதியான வாதங்களைச் சிலர் முன்வைப்பது ஏற்கத்தக்கது அல்ல” என்கிறார் அர்ஜுன மூர்த்தி.
`பொருளாதாரம் அபாரமாக வளர்ந்திருக்கிறது’ என்கிறார்கள். அப்படியென்றால், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தால், `கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற கட்சி ஏன் உருவாகப்போகிறது... இதற்குப் பிரதமர் மோடியின் பதில் என்ன?
