Politics
“தேமுதிகவின் சித்தாந்தமே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான்” - அமைச்சர் வன்னி அரசு பதிலடி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதாவது, கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் திமுகவின் இறுக்கமான அணுகுமுறையால் தான் கூட்டணி உடைந்தது என்றும், கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு 100 சதவீதம் திமுக தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் இந்த விமர்சனம் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. அதற்கு பதிலடி கொடுத்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் பதவிக்காக விசிக கூட்டணிக்கு போய்விட்டதாக விமர்சனம் செய்தார். மேலும், தேமுதிகவுக்கு 10 சீட்டு கொடுத்தது ஏன் விசிகவுக்கு கண்ணை உறுத்துகிறது? தேமுதிக மீது ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் விமர்சனத்துக்கு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அவர்கள் பா.ஜ.கவுடன் கடந்த காலங்களில் செயல்பட்டவர்கள். கடைசி நேரத்தில் இந்த கூட்டணியா? அந்த கூட்டணியா? என்று இரண்டு பக்கமும் பேரம் பேசியவர் தான் தேமுதிகவின் தலைவர். ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக திமுகவுக்கு வந்தவர்கள் எங்களை பார்த்து சொல்கிறார்கள். நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீண்ட காலமாக பயணப்பட்டு வந்ததாகவும், இந்த பயணத்தில் திடீரென புதிதாக வந்த ஒரு கட்சிக்கு அதிகமான சீட்டு கொடுத்திருப்பதாகத் தான் எங்கள் தலைவர் சொன்னார்.
தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுக்கும் திமுகவுக்குமான கசப்பு ஏற்படுகிற போது திடீரென வந்த ஒரு கட்சிக்கு எப்படி கூடுதலாக சீட்டு கொடுக்க முடிகிறது? என்ற உண்மையை தான் எங்கள் தலைவர் சொன்னார். இதனை தேமுதிக மீது குற்றச்சாட்டு சொல்லவில்லை. அதை கூட புரிந்துகொள்ளாமல் உள்வாங்கிக் கொள்ளாமல் பிரேமலதா அப்படி சொல்லிருப்பது அவருடைய அறியாமையை காட்டுகிறது. விசிக எப்போதும் பதவிக்காக போகிற கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பில் சமரசம் இல்லாமல் களமாடி கொண்டிருக்கிற இயக்கம் விசிக. ஆர்.எஸ்.எஸ் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்று எங்களைப் போன்று யாரும் சொல்ல முடியாது. தேமுதிகவுடைய சித்தாந்தமே ஆர்.எஸ்.எஸுனுடைய சித்தாந்தம் தான். ஒரு கூட்டணியில் எங்களுக்கான மதிப்பீடு, எங்களுக்கான எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லும் பொழுது அதில் ஏற்பட்ட கசப்பை தான் சொல்கிறோம் தவிர, தேமுதிகா மீதான குற்றச்சாட்டு அல்ல” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)