பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம்: பயணிகள் கோரிக்கை
திட்டக்குடி:திட்டக்குடி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) சாலையில் திட்டக்குடி நகராட்சி மற்றும் தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தை பயன்படுத்தி சிறுமுளை, பெருமுளை, கீழ்ச்செருவாய், இடைச்செருவாய், வதிஷ்டபுரம், தர்மகுடிக்காடு, கோழியூர், கோடங்குடி மற்றும் பெரம்பலுார் மாவட்ட கிராமங்கள் என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு திட்டக்குடி வந்து, இங்கிருந்து விருத்தாசலம், கடலூர், திருச்சி, சென்னை, சேலம் மற்றும் பெங்களூரு உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அச்சமடைந்து வந்தனர்.
அச்சத்தைப்போக்க, கடந்த 2008ல் அப்போதைய பேரூராட்சி நிர்வாகம், வணிகர் நல சங்கம் இணைந்து பஸ் நிலையம் முன்பு புறக்காவல் நிலையம் அமைத்து கொடுத்தது. இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் மேம்படுத்தும் பணியின்போது, புறக்காவல் நிலையம் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டப்படாததால் இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.
எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, திட்டக்குடி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட போலீஸ் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.