Politics
தமிழக சட்டசபை தேர்தல் செலவு ரூ.52 கோடி: தேர்தல் கமிஷனில் பா.ஜ., தகவல்
- சிறப்பு நிருபர் - தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத்

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களுக்காக, 1,473 கோடி ரூபாயை தேர்தல் நிதியாக பா.ஜ., பெற்றுள்ளது. இதில், தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக மட்டும், 52 கோடி ரூபாயை அக்கட்சி செலவிட்டுள்ளதாக தேர்தல் கமிஷனில் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல், கடந்த ஏப்ரலில் 9ல் தொடங்கி, 29ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை, அதன் செலவின விபரங்கள் தலைமை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின்போது, பா.ஜ., அதன் மத்திய தலைமையகத்தில் மட்டும் 1,472.80 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. இது, காங்கிரஸ் கட்சியின் மத்திய மற்றும் மாநில பிரிவுகள் அனைத்தும் சேர்த்து பெற்ற நிகர வருவாயான 207 கோடி ரூபாயை விட ஏழு மடங்கு அதிகம்.
இந்த ஐந்து மாநில தேர்தலின்போது, ஒருங்கிணைந்த செலவின அறிக்கையில், 207.17 கோடி ரூபாய் நிகர வருவாயாகவும், 248.55 கோடி ரூபாய் செலவினத்தையும் காங்கிரஸ் பதிவு செய்துள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் செலவின விபரங்களை பா.ஜ., இதுவரை வெளியிடவில்லை. பிற மூன்று மாநிலங்களில், அக்கட்சி 159.7 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
இதில், 130.4 கோடி பொதுவான கட்சி பிரசாரத்திற்காகவும், மீதமுள்ள தொகை வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக 96.27 கோடி ரூபாய் பா.ஜ., செலவழித்துள்ளது. தமிழகத்தில் அக்கட்சி 51.56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், 44.51 கோடி ரூபாய் பொது பிரசாரத்திற்கும், 7.05 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
ஊடக விளம்பரங்களுக்காக 23.96 கோடி ரூபாயும், நட்சத்திர பிரசாரகர்களின் பயணத்திற்கு 10.04 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. விளம்பர பொருட்களுக்காக 5.85 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பா.ஜ., 11.90 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், 9.19 கோடி பொது பிரசாரத்திற்கும், 2.71 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து, பொது பிரசாரத்திற்கு 143 கோடி ரூபாயும், வேட்பாளர்களுக்கு 105.55 கோடி ரூபாயும் செலவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அக்கடசியின் மொத்த தேர்தல் செலவு 248.55 கோடி ரூபாய்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.