Politics
மலேஷியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்கிறது தமிழகம்

சென்னை: தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் ஆற்று மணல், மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில், 13 இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள், அமலாக்கத் துறை வழக்கு காரணமாக, 2023ல் மூடப்பட்டன. புதிதாக, 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர் பிரச்னையால் இப்பணிகள் முடங்கின.
கருங்கல் உடைப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து தரமில்லாத, எம் சாண்ட் விற்பனைக்கு வருகிறது. இதை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், புதிதாக மணல் குவாரிகளை திறந்து, 'ஆன்லைன்' முறையில் விற்பனை செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஆன்லைன் முறையை, நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைக்க, அரசு உத்தர விட்டுள்ளது.
இது தொடர்பான பணிகள், நீர்வளத் துறை, கனிமவளத் துறை வாயிலாக நடந்து வருகின்றன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
துாத்துக்குடி துறைமுகம், எண்ணுார் துறைமுகங்களில் இருந்து மணல் விற்பனை மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டில் கிடைக்கும் ஆற்று மணல், எம் சாண்ட் விலையை விட, இறக்குமதி மணல் விலை அதிகமாக இருந்ததால், இத்திட்டம் பாதியில் முடங்கியது.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்கின்றன. அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை அறித்து, தமிழகத்திலும் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
கொள்கை அளவில் இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விலை நிர்ணயம், விற்பனை போன்ற விஷயங்களுக்கான விதிமுறைகளை வகுத்து வருகிறோம். விரைவில், இறக்குமதி மணல் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.