Politics
பெண்ணிடம் ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டிய ஜிம் உரிமையாளர் கைது
புதுச்சேரி: ஜிம்மிற்கு சென்ற பெண்ணிடம் ரூ. 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கிராம பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 35; ஜிம் நடத்தி வருகிறார். இவரது உடற்பயிற்சி கூடத்திற்கு திருமணமான பெண் ஒருவர் சென்றார். அங்கு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆண் நபருடன் நட்பாகி பழகி வந்துள்ளார். இதனை பார்த்த உடற்பயிற்சி உரிமையாளர் பிரசாந்த், இருவரும் கள்ளத் தொடர்பில் இருப்பதாக கூறி அந்த பெண்ணிடம் 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் வீட்டில் தெரியப்படுத்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், நான் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜிம்மிற்குச் சென்று வருகிறேன். அப்போது, ஆண் நபர் ஒருவர் தனது பயிற்சிக்கு உதவினார். இதற்கிடையே, ஜிம் உரிமையாளர் கடந்த 8ம் தேதி தன்னை மொபைலில் அழைத்து, தனக்கு பயிற்சியில் உதவிய நபருடன், தான் தவறாக நடந்து கொண்டதாக கூறி பேசினார். அது தொடர்பான வீடியோ உள்ளதாகவும் கூறி ரூ. 50 லட்சம் கேட்டார்.
இதனால், எனக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலும் ஏற்பட்டது. ஆகையால், எனது தனிப்பட்ட வாழ்க்கையை தவறான வகையில் பேசியதுடன், அதுதொடர்பான பணம் கேட்டு மிரட்டிய ஜிம் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போலீசார் ஜிம் உரிமையாளர் பிரசாந்த் மீது வழக்குப் பதிந்து, நேற்று கைது செய்தனர். பின், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.