Politics
ஆண் நண்பருடன் நெருக்கமான வீடியோவை வெளியிடுவேன்: பெண்ணை மிரட்டிய ஜிம் உரிமையாளர் கைது

புதுச்சேரி: ஜிம்மில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த பெண்ணின் வீடியோவை வெளியிடுவேன் என, மிரட்டி ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டிய ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மேற்குப் பகுதி உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த், 35; சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறார். அதில், திருமணமான பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்து வந்தார். அப்போது, ஜிம்மில் தி.மு.க., பிரமுகர் ஒருவரும் உடற்பயிற்சி செய்து வந்தார். அவருக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் நெருக்கமாக மாறியது.
ஜிம்மிற்கு வந்து செல்லும்போது, இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஜிம்மில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த உரிமையாளர் பிரசாந்த், தி.மு.க., பிரமுகரும், பயிற்சிக்கு வந்த பெண்ணும் நெருங்கமாக இருக்கும் வீடியோக்களை பார்த்தார். அதனை தனது மொபைல்போனில் டவுன்லோடு செய்து கொண்டார்.
இதையடுத்து, பெண்ணை தொடர்பு கொண்ட ஜிம் உரிமையாளர் பிரசாந்த், சி.சி.டி.வி., காட்சிகளை காண்பித்து மிரட்டினார். பயந்துபோன அப்பெண் தனது நண்பரான தி.மு.க., பிரமுகரிடம் தகவலை கூறியுள்ளார். தி.மு.க., பிரமுகர், ஜிம் உரிமையாளர் பிரசாந்த்திடம் பேசியபோது, இருவரும் கூட்டு சேர்ந்துள்ளனர். பின், இருவரும் இணைந்து அப்பெண்ணிடம் ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டும். மறுத்தால் சி.சி.டி.வி., காட்சிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என, மிரட்டியுள்ளனர்.
இது குறித்து பெண், தனது தந்தையிடம் தெரிவித்து, தந்தையின் மூலம் அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அப்போது, போலீஸ் அதிகாரி மற்றும் போலீஸ் புரோக்கர் ஒருவர் கூட்டு சேர்ந்து, அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில், ஜிம் உரிமையாளர் மீது மட்டும் புகார் அளிக்கும்படியும், உடன் இருந்த தி.மு.க., பிரமுகர் மீது புகாரில் தெரிவித்தால் நாங்களே சி.சி.டி.வி., காட்சிகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ஜிம் உரிமையாளர் பிரசாந்த் வெளியிட்டதாக தெரிவித்து விடுவோம் என, மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன அப்பெண், ஜிம் உரிமையாளர் பிரசாந்த் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, பணம் கேட்டு மிரட்டியதாக ஜிம் உரிமையாளர் பிரசாந்த் மீது வழக்கு பதிந்து போலீசார் நேற்று கைது செய்தனர். பின், அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய நபரான தி.மு.க., பிரமுகர், கட்டபஞ்சாயத்து செய்த போலீஸ் புரோக்கர் மற்றும் காக்கிகள் சிலர் மீதும் போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதிப்பது ஏன் என, கேட்டு சமூக வலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.