மாநில கூடைப்பந்து போட்டி சென்னை அணிகள் அபாரம்
சென்னை: மாநில கூடைப்பந்து போட்டியில், சென்னையைச் சேர்ந்த இந்திய வங்கி மற்றும் ஐ.ஓ.பி., அணிகள் வெற்றி பெற்று அசத்தியுள்ளன.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், இருபாலருக்குமான 76-வது தமிழ்நாடு சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி அணிகள் பங்கேற்று வருகின்றன.
போட்டி நாக் -அவுட் கம் லீக் முறையில் நடைபெற்று வருகிறது. நாக்-அவுட் போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஆடவர் முதல் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இந்தியன் வங்கி அணி, சென்னை ஐ.சி.எப்., அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் அசத்திய இந்தியன் வங்கி அணி 89 – 54 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
மற்றொரு போட்டியில், சென்னை ஐ.ஓ.பி., அணி, சென்னை வருமான வரித்துறை அணியை எதிர்த்து மோதியது. இதில் அசத்திய சென்னை ஐ.ஓ.பி., அணி 80 – 69 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
அதேபோல, மகளிர் லீக் ஆட்டத்தில் சென்னை எஸ்.டி.ஏ.டி., எலைட் அணி, சென்னை ஐ.சி.எப்., அணியை 88 – 76 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தெற்கு ரயில்வே அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியை 80 – 57 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தியுள்ளது.