பள்ளி அளவிலான கூடைப்பந்து 4 அணிகள் ‘லீக்’ சுற்றுக்கு தகுதி
சென்னை: சென்னை பள்ளிகள் அளவிலான கூடைப்பந்து போட்டியில், செங்கை அரசு பள்ளி, லேடி சிவசாமி உட்பட நான்கு அணிகள், ‘லீக்’ சுற்றுக்கு முன்னேறின.
லேடி சிவசாமி பள்ளி சார்பில், சென்னை பள்ளிகள் அளவிலான கூடைப்பந்து போட்டி, மயிலாப்பூர் பள்ளி வளாகத்தில் நடக்கின்றன. போட்டியில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவியர் அணிகள் மோதுகின்றன.
நேற்று காலை நடந்த ‘நாக் அவுட்’ சுற்றில், செங்கை அரசு பள்ளி அணி, 33 – 27 என்ற புள்ளிக்கணக்கில், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியையும், கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி, 44 – 41 என்ற புள்ளிக்கணக்கில் செயின்ட் ரபேலின் பள்ளியையும் தோற்கடித்தன.
மற்ற போட்டிகளில், செயின்ட் கேவின்ஸ் பள்ளி, 39 – 12 என்ற புள்ளிக்கணக்கில், ஆதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளியையும், லேடி சிவசாமி பள்ளி, 50 – 14 என்ற புள்ளிக்கணக்கில் வியாச வித்யாலயா பள்ளியையும் வீழ்த்தின.
அனைத்து ‘நாக் அவுட்’ போட்டி முடிவில், லேடி சிவசாமி பள்ளி, கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி, செயின்ட் கேவின்ஸ் பள்ளி, செங்கை அரசு பள்ளி ஆகிய நான்கு அணிகள், ‘லீக்’ சுற்றுக்கு முன்னேறின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.