மாடு திருட வந்த தந்தை, மகன் கைது
கடம்பத்துார்: சிற்றம்பாக்கம் பகுதியில் மாடு திருட வந்த தந்தை – மகனை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 50; விவசாயி. இவர், வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மாடுகளை திருட முயன்றனர்.
அப்போது, வீட்டின் வெளியே வந்த ஏழுமலை கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, தப்பியோட முயன்ற இருவரையும் பிடித்து, கடம்பத்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி சாய்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன், 45 மற்றும் அவரது மகன் யுவராஜ், 19, என்பதும், மாடுகளை திருட வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.