Arts, culture, entertainment and media
200 தட்டுகளில் அணிவகுத்த சீர்வரிசை... விமரிசையாக நடந்த அரசமரம் - வேப்பமரம் திருக்கல்யாணம்..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில், செல்வ விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் 200 தட்டுகளில் சீர்வரிசையுடன் செல்வ விநாயகர் ஆலயத்தில் உள்ள அரசமரம் வேப்ப மரத்திற்கு திருக்கல்யாணம் நடத்திய கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து நிற்கும் இடங்களில் இந்த தெய்வீக மரங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முறை காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் உள்ள அரச மரத்திற்கும், வேப்பமரத்திற்கும் திருமணம் செய்வதாக கிராம மக்கள் பத்திரிக்கை அடித்து அருகில் உள்ள கொப்பியம்மன் கோயில் திடலில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேங்காய் வெற்றிலை பாக்கு வாழை உள்ளிட்ட பழவகைகளுடன் பட்டுவேட்டி, பட்டுசேலை அடங்கிய 200-க்கும் மேற்பட்ட தாம்பூல தட்டுகளில் மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர்.
குலவையிட்டு ஊர்வலமாக தலையில் சுமந்து வந்து சிவன் பார்வதியாக வழிபடும் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் முன்பு சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர் அபிஷேகம் செய்து, புத்தாடைகள் போர்த்தி, மாலை அணிவித்து, தாலி கட்டி திருக்கல்யாணம் செய்து வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் மேல்மங்கலம் தெற்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு சென்றனர்.
இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிப்பதாகவும், திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறுவதோடு அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியத்தோடு கோயில் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வார்கள் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேல்மங்கலம் தெற்கு கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
