Politics
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு! தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேகம்

திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் அக். 6ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுதாக்கல், செப் .,9 ல் துவங்கியது. இதனால், மாவட்ட தேர்தல் பிரிவினர் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வாக்காளர்களின் வசதிக்காகவும், தேர்தல் புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும், தாராபுரம் தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன/ வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் வழங்குவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், 9 நிலை கண்காணிப்புக்குழுக்கள் மற்றும் 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தினமும் மூன்று ஷிப்ட்களில் 24 மணி நேரமும் தொகுதிக்குள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு வாகனங்களின் நகர்வுகள், ஜி.பி.எஸ். கருவி வாயிலாக கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுப்பதிவுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. தாராபுரம் தொகுதியில், 186 அமைவிடங்களில் மொத்தம் 320 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 20 சதவீதம் கூடுதல் என்ற அடிப்படையில் 384 கன்ட்ரோல் யூனிட், 384 பேலட் யூனிட் மற்றும் 30 சதவீதம் கூடுதல் என்ற அடிப்படையில் 416 'விவி பேட்' இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அடுத்த மூன்று நாட்களுக்குள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தாராபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.