Arts, culture, entertainment and media
போதைப்பொருள் கடத்தலில் திமுக பிரமுகர்; நாகையில் என்.சி.பி., அதிகாரிகள் விசாரணை

சென்னை: தி.மு.க., பிரமுகரான, 'புல்லட்' மகாலிங்கம், 64, என்பவர், மும்பை, டில்லியில் இருந்து, தமிழகத்திற்கு, 'மெத் ஆம்பெட்டமைன்' கடத்துவதாக தகவல் கிடைத்ததால், நாகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே, விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் மகாலிங்கம், அவரது மகன் அலெக்ஸ், 41 ஆகியோர், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தாண்டு தஞ்சாவூரில் இருந்து, புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் கடத்திய அலெக்ஸ், என்.சி.பி., எனும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன், நாகை மாவட்டம், கீழையூர் காவல் நிலைய போலீசாரால் மகாலிங்கம் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.
இவர்களின் வீடுகளில், சில தினங்களுக்கு முன், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, மகாலிங்கம், அலெக்ஸ் ஆகியோர், கடத்தல் பணத்தில், நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் பகுதிகளில் அசையா சொத்துகள் வாங்கி இருப்பதும், இறால் பண்ணையில் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் டில்லியில் இருந்து மெத் ஆம்பெட்டமைன் கடத்தலில் ஈடுபடுவதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன. இது தொடர்பாக, நாகையில் என்.சி.பி., அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'மகாலிங்கம், அலெக்ஸ் ஆகியோர், டில்லியில் ஏஜன்டுகளை நியமித்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்பவர்களை கைது செய்ய வேண்டி இருப்பதால், விசாரணை நடக்கிறது' என்றனர்.