Environment
நேபாளத்தில் மாயமானவர்களின் உறவினர்கள் மரபணு சேகரிப்பு
சென்னை: நேபாளத்தில் காணாமல் போன 84 பேரில், 83 பேரின் உறவினர்களிடம், டி.என்.ஏ., எனப்படும் மரபணு பரிசோதனை நிறைவு பெற்றன.
நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,357ஐ தாண்டி உள்ளது.
மேலும், 5,326 பேரை காணவில்லை. அங்கு சுகாதார நிலையை கருத்தில் வைத்து, உயிரிழந்தவர்களின் உடலை, நேபாள அரசு அடக்கம் செய்து வருகிறது. அதற்கு முன், அவர்களின் டி.என்.ஏ., மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளது.
இந்த பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 304 பேர் சிக்கினர். அவர்களில், 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், 84 பேரை காணவில்லை. அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தக வல் கிடைக்காமல் உள்ளது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி, நேபாளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களின் முதல்நிலை உறவினர்களான தாய், தந்தை, மகன், மகள் ஆகியோரில், ஒருவரிடம் கட்டணமின்றி டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சென்னை, மதுரை, தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள தடய அறிவியல் மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
நேபாளத்தில், மாயமான 84 பேரில், ஒருவரின் உறவினர்கள் வெளிநாட்டில் உள்ளதால், அவர்கள் தவிர்த்து, மற்ற அனைவரின் உறவினர்களிடம், டி.என்.ஏ., பரிசோதனை முடிக்கப்பட்டு உள்ளது.
டி.என்.ஏ., பரிசோதனைகளின் முடிவுகளை, நேபாள அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன என, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.