‘கேரள வனத்துறை நவீனமயமாக்கம்’
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையார் வனப்பயிற்சி மையத்தில், பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கேரள வனத்துறை அமைச்சர் ஷிபு பேபிஜான் பேசியதாவது:
மனித – -வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த, அதிநவீன வசதிகளுடன் வனத்துறை முழுமையாக நவீனமயமாக்கப்படும். களத்தில் வனவிலங்குகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நவீன உபகரணங்கள் மற்றும் கரடுமுரடான பாதைகளிலும் இயங்கும் ஏ.டி.வி., ரக சிறப்பு வாகனங்கள் வழங்கப்படும்.
மலையோர பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே, மனித- – வனவிலங்கு மோதல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். சட்டத்தை அமல்படுத்துவதோடு நின்றுவிடாமல், இயற்கையை பாதுகாப்பதே வனத்துறையின் கடமை.
இவ்வாறு, பேசினார்.
கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
93 பெண்கள் ஆறு மாத வனத்துறை பயிற்சி மற்றும் மூன்று மாத காவலர் பயிற்சி என மொத்தம் ஒன்பது மாத பயிற்சியை நிறைவு செய்து, 55 ஆண்கள் மற்றும் 93 பெண்கள் பணியில் இணைந்துள்ளனர்.
பயிற்சியில், வனவியல் பாடங்களுடன் உடற்தகுதி, கராத்தே, யோகா, முதலுதவி மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களில், 9 பொறியியல் பட்டதாரிகள், 42 முதுகலை பட்டதாரிகள், 72 பட்டதாரிகள், ஒரு ஆயுர்வேத மருத்துவர் மற்றும் ஒரு எம்.பில்., படித்தவரும் உள்ளனர்.