Politics
மிஸ்டர் கழுகு: ஒட்டாத வெற்றி கூட்டணி!

துணை சபாநாயகர் பதவியை ஆஃபர் செய்தும்கூட தோழர்கள் மசியவில்லை. த.வெ.க கூட்டணிக்குச் செல்லும் எண்ணமே அவர்களுக்கு இல்லையாம்.
“இடைத்தேர்தலில் எப்படியும் நாமதான் வெற்றிப்பெறப் போகிறோம் என அசால்ட்டாக இருக்கிறது த.வெ.க” என யாரிடமோ போனில் பேசியபடியே அலுவலகத்துக்கு வந்த கழுகாருக்கு, கடலைப்பருப்பு சுண்டலும், கொழுக்கட்டையும் கொடுத்தோம். ‘‘என்ன விநாயகர் சதுர்த்தி மூடுக்கு இப்போதே வந்துவிட்டீரா?’’ என்று கேட்ட கழுகார், கொழுக்கட்டையைச் சுவைத்துவிட்டு செய்திக்குள் நுழைந்தார்.
“சட்டமன்றத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைக் கிண்டல் செய்வது போன்ற உடல்மொழியுடன் முதல்வர் விஜய் பேசியது, த.வெ.க-வுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. தோழமைக் கட்சிகளே கண்டித்திருக்கும் நிலையில், மிசா காலத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ தி.மு.க-மீது அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. செப்டம்பர் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் முதல்வரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கும் தி.மு.க., ‘கஸ்டோடியல் டார்ச்சரைக் கிண்டல் செய்யும் அளவுக்குக் குரூர மனநிலை கொண்டவர் முதல்வர் விஜய்’ என்கிறரீதியில் பேசப்போகிறார்களாம்.”
“ஓஹோ...”
“விலைவாசி உயர்வு, மறைமுக மின்கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களையும் நடத்த முடிவெடுத்திருக்கிறது தி.மு.க. தொழிலாளர்கள், விவசாய அமைப்புகளைத் தூண்டிவிடும் யுக்தியையும் கையிலெடுத்திருக்கிறார்கள். அடுத்த ஒரு மாதத்துக்கு தி.மு.க படு ஆக்டிவ்வாக இருக்கப்போகிறதாம். இந்தப் போராட்டத்துக்கு நடுவே, த.வெ.க ஆட்சியில் கோலோச்சுவதாக சொல்லப்படும் ரெட்டி சகோதரர்களின் செயல்பாடுகள் குறித்த மொத்த விவரத்தையும் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி, அரசுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி...”
“ம்ம்... த.வெ.க கூட்டணியின் பெயர் சூட்டு விழா சிறப்பாக நடைபெற்றிருக்கிறதாமே!”
“ஆமாம். போண்டா, மசால் தோசை, கட்லெட் என `கமகம’ விருந்தோடு நடந்து முடிந்திருக்கிறது பெயர் சூட்டு விழா. முதல்வர் விஜய்யைத் தலைவராகக்கொண்ட அந்தக் கூட்டணிக்கு, ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். முதலில், ‘சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்று முன்மொழியப்பட்டதாகவும், வி.சி.க தலைவர் திருமாவின் அறிவார்ந்த ஆளுமையால்தான், ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்று திருத்தியமைக்கப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார் சிந்தனைச்செல்வன்.”
“டெல்லியைப் பகைத்துக்கொள்ளும் மூடிலேயே த.வெ.க இல்லையே...”
“உமக்குத் தெரிகிறது. கூட்டணியில் இருப்பவர்களுக்குப் புரியவில்லையே! ‘2029-ல் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்விக்கும் த.வெ.க பதில் சொல்லவில்லை. செய்தியாளர் சந்திப்பில் ஆதவ் அர்ஜுனாவிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டபோது, ‘நான் பதில் சொல்கிறேன்’ என்று குறுக்கே பாய்ந்துவிட்டார் மாணிக்கம் தாகூர். ‘நாங்களெல்லாம் `இந்தியா’ கூட்டணியில் இருக்கிறோம்’ என்று த.வெ.க-வினரைத் தவிர்த்து சைகை காட்டியிருக்கிறார். ‘இப்போதைக்குக் கரங்கள் கோத்தாலும், மனங்கள் இணையவில்லை’ என்கிறார்கள் த.வெ.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள். இந்த வெற்றிக் கூட்டணி, ஒட்டாத வெற்றிக் கூட்டணியாகவே வெளிப்படுகிறது.”
“ரைட்டு... இடதுசாரிகள் கடைசிவரை மசியவில்லையோ?”
“ம்ம்... துணை சபாநாயகர் பதவியை ஆஃபர் செய்தும்கூட தோழர்கள் மசியவில்லை. த.வெ.க கூட்டணிக்குச் செல்லும் எண்ணமே அவர்களுக்கு இல்லையாம். இடைத்தேர்தலுக்குக்கூட த.வெ.க-வை ஆதரிக்கும் முடிவை இன்னும் எடுக்கவில்லையாம் தோழர்கள். ‘இடைத்தேர்தலைப் புறக்கணிக்கலாம்’ என வலியுறுத்துகிறார்களாம் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள். அதேபோல, மதுராந்தகத்தில் வெற்றிபெற மாம்பழக் கட்சியை எப்படியாவது இழுக்க வேண்டும் என மன்றாடுகிறாராம் அறிவாலயத்தின் மாப்பிள்ளை.”
“முதல்வர் லண்டனுக்குச் செல்வதைத் தடுத்ததாமே ஆளுநர் மாளிகை... என்ன விவகாரம்?”
“தடுக்கவில்லை. `தள்ளிப்போட முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இந்தியாவுக்கு வரும் மலேசியப் பிரதமர், சென்னைக்கு வந்து முதல்வர் விஜய்யைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அது தொடர்பாக எடுத்துச் சொல்லி, முதல்வரின் லண்டன் பயணத்தைத் தள்ளிப்போடக் கேட்டுக்கொண்டதாம் ஆளுநர் மாளிகை. ஆனால், ‘விரைவில் மலேசியாவுக்குச் செல்லும் திட்டமும் முதல்வரிடம் இருக்கிறது. அப்போது, மலேசியப் பிரதமரை கோலாலம்பூரில் சந்திப்போம்’ என்று சொல்லிவிட்டார்களாம் முதல்வர் அலுவலகத்தினர். ‘ஆளுநரின் கோரிக்கையை மறுத்துவிட்டு லண்டனுக்குச் செல்லும் அளவுக்கு அங்கே என்ன முக்கியமான சந்திப்புகள் நடக்கின்றன?’ என விசாரிக்கச் சொல்லியிருக்கிறதாம் ஆளுநர் மாளிகை.”
“சரிதான்...”
“அடுத்தாக, டெல்லிக்குச் செல்லத் திட்டமிடுகிறாராம் முதல்வர் விஜய். பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து, தமிழகத்தின் நிதிச்சுமைகளை எடுத்துக் கூறி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைக் கோரவிருக்கிறாராம்” என்ற கழுகாருக்கு, சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். சுவைத்துக்கொண்டே அடுத்த செய்திக்குத் தாவினார்.
“முந்தைய ஆட்சியில் நிலக்கரி கொள்முதல், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கிய விவகாரத்தைத் தோண்டிவருகிறதாம் த.வெ.க அரசு. ‘அதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க-வினரை எப்படியும் சிக்க வைத்துவிடலாம்’ என முதல்வரைக் குஷிப்படுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள்.”
“பார்க்கத்தானே போகிறோம்...”
“விஷயம் தெரியுமா... தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து சாய்குமாரை மாற்றிவிட்டு, அவரை ஆலோசகர் பொறுப்பில் நியமிக்கலாமா என ஆலோசித்திருக்கிறார் முதல்வர். ‘தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்... பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ என்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்துவிட்டதால் இந்த ஆலோசனையாம். தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி அல்லது மத்திய அரசுப் பணியில் இருக்கும் கிருஷ்ணன் என இருவரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. முதல்வரின் லண்டன் பயணத்துக்குப் பிறகு சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அன்புவையும் பணியிட மாற்றம் செய்யவிருக்கிறார்களாம். அவரை அந்த இடத்திலிருந்து மாற்றிவிடலாம் என உளவுத்துறையிலிருந்து முதல்வருக்கு `நோட்’ சென்றிருக்கிறதாம்...”
“ம்ம்... வேறு என்ன விசேஷச் செய்திகள்?”
“பிரபல தர்கா இடம்பெற்றிருக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் அறிவாலயக் கூட்டணிக் கட்சித் தலைவர். அவரது கட்சிக்குள் பெரும் பிரளயம் வெடிக்கக் காத்திருக்கிறதாம். எம்.எல்.ஏ., கட்சித் தலைமைப் பொறுப்புகளை சீனியர்களான இருவர் மட்டுமே அனுபவித்துவருவதால், வெகுண்டெழுந்துவிட்டார்களாம் அந்தக் கட்சியிலுள்ள இளைஞர்கள். கட்சியின் இரண்டாம் உச்சப் பொறுப்பில் இருக்கும் இளம் நிர்வாகி ஒருவர், ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்’ எனத் தலைமையிடம் நேரடியாகவே கேட்டு வருகிறாராம்.”
“ஓ...”
“அதற்கு, அந்த இரண்டு சீனியர் நிர்வாகிகளும் சம்மதிக்காததால், இளைஞர்களைத் தலைமைக்கு எதிராக ஒன்று திரட்டியிருக்கிறார் அந்த இளம் நிர்வாகி. அதை ஸ்மெல் செய்த தலைமை, சென்னையில் பொதுக்குழுவை நடத்தினால் பிரச்னை வரும் என கோவைக்கு மாற்றிவிட்டதாம். ‘பொதுக்குழுவை துபாயில் வைத்து நடத்தினாலும்கூட எங்கள் குமுறல்களைக் கொட்டுவோம்’ என்று கட்சியிலுள்ள இளைஞர்கள் பேசிவருவதால், பதற்றத்தில் இருக்கிறார்களாம் தலைமையில் இருப்பவர்கள்.”
“பலே...”
“கடைக்கோடி மாவட்டத்திலுள்ள காவல் உயரதிகாரி, சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். புகார் மனு வாங்குவதில் தொடங்கி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது வரை எந்த நிகழ்வானாலும் அதை வீடியோவாகப் பதிவுசெய்து ரீல்ஸ் போட்டுவிடுகிறாராம். இந்தச் சூழலில், பெண்கள் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறாராம். பலரை, திருமணம் செய்துகொள்வதாகப் பொய்யாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். விஷயம் மேலிடத்துக்குத் தெரியவரவே, சீக்ரெட்டாக விசாரித்து வருகிறார்களாம் உளவுத்துறை அதிகாரிகள். விவகாரம் சி.பி.சி.ஐ.டி விசாரணை வரை செல்லும் என்கிறார்கள்...” என்று கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,
“சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ் டிரான்ஸ்ஃபரில், டம்மி பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார் சீனியரான தமிழ்க் கடவுள் அதிகாரி. சின்னவரைக் கைதுசெய்ய காவல்துறை சென்றபோது, ‘ரொம்ப ஹார்ஷாக நடந்துகொள்ளாதீர்கள். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை கைதை தாமதப்படுத்துங்கள்’ என்று தமிழ்க் கடவுள் அதிகாரி கேட்டுக்கொண்டது, ஆதாரங்களுடன் முதன்மையானவருக்குப் போய்விட்டது. அதன் எதிரொலிதான் இந்த அதிரடி டிரான்ஸ்ஃபர் என்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, சிறகுகளை விரித்துப் பறந்தார் கழுகார்.
