Arts, culture, entertainment and media
“ஒரு அதிரடி இளையராஜா சம்பவம் உறுதி...” - அடுத்த அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ‘டோரதி’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குவது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது 1540வது படமாகும். முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜும் இளையராஜாவும் இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படத்தில் இருந்து இதுவரை வெளியான ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முத்துமணி பாடல் பெரும் வெற்றிபெற்றதையடுத்து பாடலின் உருவான விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் பின்னணி இசை தொடர்பாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “டோரதி படத்தின் முதல் வடிவத்தை ராஜா சாரிடம் காட்டினேன். அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சில நொடிகள் அமைதியாக இருந்த அவர் பின்பு என்னப் பார்த்து ‘அருமையான படம்... நாளை காலையிலிருந்தே வேலையைத் தொடங்கலாம்’ என்று கூறினார். என் படத்திற்கு இசையமைக்க ராஜா சார் ஒப்புக்கொண்டதை நினைத்து நான் மிகுந்த உற்சாகத்தில் இருந்தபோது, ‘படம் வெளியாவதற்கு முன்பே இதன் பின்னணி இசையை (OST) ஒரு தனி ஆல்பமாக வெளியிட வேண்டும்’ என்றும் அவர் கூறினார். அப்போது என் மனதிற்குள் தோன்றியது இதுதான்... ‘சரி... அப்போ ஒரு அதிரடி சம்பவம் உறுதி’. இதோ இப்போது அந்த தருணம் வந்துவிட்டது.
இப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு நாளை டிஜிட்டல் முறையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வினைல் ரெக்கார்டுகளிலும் வெளியாகிறது. மேலும் சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் 40 நிமிடம் கொண்ட நேரலை இசை நிகழ்ச்சி (OST concert) நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இளையராஜா சார் வழங்கும் இசை விருந்தாக அமையப்போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வெளியான இரண்டு பாடல்களுக்கு ராஜா சம்பவம், ராஜா டிரான்ஸ் என தலைப்பு வைத்த அவர் இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘ராஜா பிளிஸ்’(Raaja Bliss) என வைத்துள்ளார். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் பின்னணி இசையை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
I showed the first cut of #Dorothy to Raaja sir and was eagerly looking at him awaiting what's he gonna say.After few moments of silence he looked at me and said 'Beautiful film... Let's start work from tomorrow morning'. I was so so… pic.twitter.com/vyqdmZljeZ
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)