Economy, business and finance
‘பணம் கொடு.... இல்லையென்றால் வழக்கு!’
வனத்துறையினர் எங்ககிட்ட பணம் வாங்கினது உண்மைதான். அந்தப் பணத்துல அவங்கவங்க பொண்டாட்டிகளுக்குத் தங்க நகைகூட வாங்கிக் குடுத்திருக்காங்க.

ஜவ்வாது மலையில் வெடித்து கிளம்பிய குற்றச்சாட்டு
ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களை மிரட்டிப் பணம் வசூலித்ததாக எழுந்த புகார், ரூ.1.2 கோடி லஞ்சக் குற்றச்சாட்டு எனப் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இதையடுத்து ஆறு வனத்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் பின்னணியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் சிறகடிக்கின்றன. `ஜவ்வாது மலையில் என்ன நடக்கிறது?’ விரிவாக விசாரித்தோம்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையின் ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். இவர்களின் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குப் பட்டா வாங்கித்தருவதாகக் கூறி, வனத்துறையினரே பணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வனச்சரகர்கள் பிரபு, சுரேஷ், செங்குட்டுவன், வனவர்கள் சுப்பிரமணி, அருணகிரி, வனக்காவலர் முத்து என ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
முதியவரை அடிச்சதுல காதுல ரத்தம்!
வனத்துறையினர் மிரட்டி லஞ்சம் வாங்கியதாக மலைக்கிராம மக்கள் சார்பில் சின்னசாமி, தசரதன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதியே ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தது தற்போது தெரியவந்திருக்கிறது. இது குறித்து தசரதனிடம் பேசினோம். “வனத்துறையினர் எங்ககிட்ட பணம் வாங்கினது உண்மைதான். அந்தப் பணத்துல அவங்கவங்க பொண்டாட்டிகளுக்குத் தங்க நகைகூட வாங்கிக் குடுத்திருக்காங்க. மலையில எங்க மக்களை அடக்கு முறை செய்யறாங்க. ஆடு மேய்க்கப் போன முதியவரை அடிச்சதுல காதுல ரத்தம் வந்திருக்கு.
மலைக்கிராமப் பொம்பளைங்க கிட்ட `ஏய், இங்க வாடி, போடி’ன்னு மரியாதையில்லாம பேசுறாங்க. காலங்காலமா விவசாயம் பண்ணுற எங்களையே ஆக்கிரமிப்பாளர்கள்னு சொல்றாங்க. பொறுத்தது போதும்னுதான் அண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்திகிட்ட வனத்துறையினர்மீது புகார் குடுத்தோம். அதுக்காகவே எங்களை மிரட்டுறாங்க. அவங்க அலுவலர்கள் இல்லை... சைக்கோ!” என்றார் ஆதங்கத்துடன்.
முதலமைச்சர் தனிப்பிரிவுக்குப் புகார்!
இது பற்றிப் பேசிய தமிழக ஆதிவாசி அமைப்புகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வெங்கடேசன், “பணம் தர மறுத்தால் பொய் வழக்கு போடுவதாக வனத்துறையினர் மக்களை மிரட்டுகிறார்கள். மலைப்பகுதியில் நடக்கும் அட்டூழியங்களை வெளியே சொன்னால் தனிப்பட்ட தாக்குதல்களும் தொடர்கின்றன. பட்டா வழங்குவதற்காக ஏற்கெனவே 1,021 விண்ணப்பங்கள் பெறப்பட்டும், தகுதியானவர்களுக்குப் பட்டா வழங்காமல் மறு ஆய்வு எனக் குழப்புகின்றனர். நில உரிமைக் குழுவின் பரிந்துரைகளைக்கூட ‘ஜி.பி.எஸ்-ஸில் காடு என வருகிறது’ என நிராகரிக்கிறார்கள்.
மேல் அத்திப்பட்டு விவசாயி நடராஜனிடம் ரூ.25,000 லஞ்சம் கேட்டு மிரட்டியதாக, அவர் முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த வனத்துறையினர் நடராஜன், வன நிலத்தை ஆக்கிரமித்ததாகப் பொய் வழக்கு போட்டு, அவருடைய மகனையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதோடு, சர்வேக்காக 5 அடி உயர முள்கூண்டுகள் அமைத்து தரச் சொல்லியும், தலா 25 குழிகள் தோண்டித் தருமாறும் மக்களைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். அதற்குக் கூலியாக ஒரு ரூபாய்கூடத் தரவில்லை’’ என்றார் கொதிப்போடு.
``நியாயமும் தர்மமும் எங்கள் பக்கம் இருக்கிறது!’’
சஸ்பெண்டான அலுவலர்கள் தரப்பில் வனவர் சுப்பிரமணி யிடம் விளக்கம் கேட்டோம். “ஆக்கிரமிப்பாளர்களின் புகாரை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு, எங்களிடம் விசாரணையோ, விளக்கமோ கேட்காமல் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், ஆக்கிரமிப் பாளர்களைக் கண்டறிந்து நோட்டீஸ் வழங்கி, நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ஜவ்வாது மலையில் 500-600 ஏக்கருக்கும் அதிகமான வனத்துறை நிலங்கள் ஆக்கிரமிப்பிலுள்ள நிலையில், மண்டப்பாறை செக்ஷனில் மட்டும் 31 ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்திருந்தேன். இதனால் மலைக்கிராம மக்கள் எங்களுக்கு எதிராக ஒன்றுகூடும் சூழல் உருவானது. செம்மரம், ரோஸ்வுட் கடத்தலில் தொடர்புடையவர்களைப் பிடிக்கச் சென்றபோதும் எங்கள்மீது கல்வீச்சு உள்ளிட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. திருவிழாவுக்காகப் போடப்பட்ட மின் ஒயர் அறுக்கப்பட்ட சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. ரிசர்வ் ஃபாரஸ்ட்டில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது சட்டவிரோதம் என்பதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாங்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது.
எங்கள் மீதான நடவடிக்கையின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் இருக்கிறார். பட்டா வழங்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை; ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிப்பது மட்டுமே எங்கள் பணி. தேவையில்லாமல் அவர் தலையிட்டு பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டார். நியாயமும் தர்மமும் எங்கள் பக்கம் இருக்கின்றன. அதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்” என்றார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “சஸ்பெண்ட் விவகாரம் குறித்து செய்தித்தாளைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அதன் பின்னணியில் நான் இல்லை; அது தவறான தகவல். மலைவாழ் மக்களிடம் அன்போடு நடந்துகொள்ளுமாறுதான் வனத்துறையினரிடம் கேட்டேன். தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், நிலத்தைப் பழங்குடிகள் ஆக்கிரமித்ததாக வனத்துறையினர் கூறுவது நம்பும்படியாக இல்லை”
வனத்தில் வாழ்கிறார்கள் என்பதாலேயே அப்பாவி மக்களிடம் வனத்துறையினர் முரட்டுத்தனத்தைக் காட்டலாமா?
