ஒரு மாதமாக கப் அடிக்கும் திருவேங்கிடபுரம் பகுதி
பொன்னேரி:திருவேங்கிடபுரத்தில், ஒரு மாதமாக குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால், துர்நாற்றமும் ஏற்படுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கிடபுரம், உப்பரபாளையம் பகுதிகளில், 2,000க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள், பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் ஓரங்களிலும், அதே பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களிலும், குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இவை, கடந்த ஒரு மாதமாக அகற்றப்படாமல் உள்ளதால், குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. சில தினங்களாக, பொன்னேரி பகுதியில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கண்ட குப்பை கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குப்பை கழிவுகளை கையாள்வதற்கு என, திருவேங்கிடபுரத்தில் தனியாக இடம் இல்லை. அதிகாரிகளை கேட்டால், 'சென்னை கொடூங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம்' என்கின்றனர். இங்குள்ள நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள், சாலையோரங்களில், ஒரு மாதமாக குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
இதற்கு தீர்வு காண, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. யாரிடம் முறையிடுவது என தெரியாமல் தவிக்கிறோம்.
அதிகாரிகளை நம்பி பயனில்லை. இனி அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும் வகையில், எங்களின் போராட்டம் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.