Politics
நியூஸ் பாக்ஸ்!
மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். சட்டம்-ஒழுங்கைப் பின்பற்றவேண்டிய இவரே சட்டத்தை மீறுவதாக சக காக்கிகள் புகார் எழுப்புகிறார்கள்

மக்கள் நலனா... நிதிச்சுமையா? - நுகர்வோர் நீதிமன்ற இடமாற்றத்துக்கு எதிர்ப்பு!
விழுப்புரம், கடலூரில் இயங்கிவரும் நுகர்வோர் நீதிமன்றங்களை, நிதிச்சுமை குறைப்பு, சொந்தக் கட்டடம் இல்லை என்ற காரணங்களைக் கூறி திருவண்ணாமலைக்கு மாற்றுவதற்கு முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. அப்படிச் செய்தால் வழக்குகளுக்காக மக்கள் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டியிருக்கும் என்பதால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் வழக்கறிஞர் காளிதாஸிடம் பேசியபோது, ``தமிழகத்தில் தற்போது செயல்பட்டுவரும் 32 நுகர்வோர் நீதிமன்றங்களைப் பாதியாகக் குறைக்கும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இது அப்பட்டமாக நுகர்வோர் உரிமைகளைப் பறிக்கும் செயல். சிதம்பரத்தில் பாதிக்கப்படும் ஒருவர் வழக்கு தொடுத்தால், அவருக்கு ரூ.10,000 இழப்பீடு கிடைக்கலாம். அதற்காக 150 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவண்ணாமலைக்கு வருடக்கணக்கில் அவர் வந்து சென்றால், எவ்வளவு செலவு செலவாகும்... அரசும், சட்டங்களும் எப்போதும் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அதில் லாப நஷ்டங்கள் பார்ப்பது சரியாக இருக்காது. அதனால் அரசு உடனே இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்” என்றார்.
மால் அனுமதிக்கு அழுத்தம்... த.வெ.க புள்ளிக்குச் சிக்கல்?
கும்பகோணம், செட்டி மண்டபம் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் கட்டியிருக்கும் மால், அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த தி.மு.க ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, த.வெ.க தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் நிதிப் பொறுப்பை கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் முக்கியப் பிரமுகர் ஒருவர், அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, நிறுத்தப்பட்ட அனுமதியை வாங்கிக்கொடுத்தாராம். இதற்காகப் பெரிய ஸ்வீட் பாக்ஸ் கைமாறியதாகப் பரபரப்பாக பேசும், மாநகரின் முக்கியப்புள்ளிகள், நேற்று வரை வறுமையில் உழன்ற அந்த த.வெ.க புள்ளி, திடுமெனப் புதிய காரில் ஹாயாக வலம்வருவதைப் படமெடுத்து வைத்திருக்கின்றனராம். இதற்கிடையில், த.வெ.க புள்ளி காரில் ஹாயாக வலம்வருவதை வீடியோ படம் எடுத்திருக்கும் கட்சியினர் ரீல்ஸ் போட்டுக் குதூகலிக்கின்றனர். கூடவே, ‘இவர்தான் கும்பகோணத்தின் அடுத்த மேயர்’ எனவும் சமூக வலைதளங்களில் செய்தியைப் பரவவிட, விவகாரத்தை தி.மு.க தரப்பினர் தங்கள் கட்சித் தலைமைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனராம். இதையடுத்து, மால் விவகாரத்தை வைத்து போராட்டம் நடத்த தி.மு.க தலைமை உத்தரவிடக்கூடும் என லோக்கல் தி.மு.க-வினர் கூறுகின்றனர்.
சாதிப் பெருமை பேசி இளைஞர்களைத் திரட்டும் காவலர்?
மதுரை, தல்லாகுளம் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். சட்டம்-ஒழுங்கைப் பின்பற்றவேண்டிய இவரே சட்டத்தை மீறுவதாக சக காக்கிகள் புகார் எழுப்புகிறார்கள். அதாவது, ‘போலீஸ் வினோத் பிரதர்ஸ்’ என்ற பெயரில் ஒரு டீமை உருவாக்கிக் கொண்டு காரில் வேகமாகச் செல்வது, அதை ரீல்ஸ் எடுத்து வெளியிடுவது, மறைமுகமாகச் சாதிப் பெருமை பேசி, இளைஞர்களை ஒன்று திரட்டும் வேலையைக் செய்வது என்று எல்லை மீறிச் செயல்படுவதாக `குபீர்’ கிளப்பும் காக்கிகள், வினோத்தின் அக்காவும் மாமாவும் காவல் ஆய்வாளர்களாக இருப்பதால், அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் புலம்புகிறார்கள்.
சிவகாசியில் தி.மு.க மோதல்; மேயர் மீது கவுன்சிலர்கள் பாய்ச்சல்!
சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க-வுக்குள் உட்கட்சி மோதல் வெடித்திருக்கிறது. மாநகராட்சியின் முதல் பெண் மேயரான தி.மு.க-வைச் சேர்ந்த சங்கீதா இன்பன், தங்களுக்கு எதிராகச் செயல்படும் கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதாகவும், கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த 1-வது வார்டு கவுன்சிலர் செல்வம், 27-வது வார்டு கவுன்சிலர் பாக்கியலட்சுமி ஆகியோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். 48 வார்டுகளில் 32 இடங்களை தி.மு.க கைப்பற்றியதுடன், மேயர், துணை மேயர் பதவிகளையும் பெற்ற நிலையில், மேயர் சங்கீதா பதவியேற்றது முதல் மாநகராட்சிக்குக் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் செய்யவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கவுன்சிலர் கூட்டம் நடத்துவது தொடர்பாகக் கேட்டாலும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசிய பிறகே முடிவு சொல்வதாக மேயர் கூறுவதாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த மேயர் சங்கீதா, ``கடந்த ஜூன் மாதமே கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் நிதி ஒதுக்குவது தொடர்பாகப் புகார் எழுப்பி, அது என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் நிதி ஒதுக்க அறிவுறுத்தினேன். இந்த விவகாரத்தில் தங்கம் தென்னரசுவின் பெயரை இழுப்பது சரியல்ல. இன்னும் இரண்டு நாள்களில் மீண்டும் கவுன்சிலர் கூட்டம் நடத்தப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.
