Economy, business and finance
திருப்புவனம் அருகே 126 பவுன் ரூ.1.56 லட்சம் கொள்ளை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கழுகேர்கடை விலக்கில் வீட்டின் பூட்டை உடைக்காமல் உள்ளே நுழைந்த நபர்கள் மறைவிடத்தில் இருந்த சாவியை எடுத்து 126 பவுன் தங்க நகை, ரூ.1.56 லட்சத்தை திருடிச்சென்றனர்.
கழுகேர்கடை விலக்கில் குடியிருப்பு உள்ளது. இதில் கொந்தகை அரசு பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரி, மகன் பிரபு, மருமகள் நிவேதாவுடன் வசித்து வருகிறார். பிரபுவின் மாமனார் ராஜா மதுரை கூடல்நகரில் உயிரிழந்தார். துக்க நிகழ்வுக்கு மகேஸ்வரி குடும்பத்தாருடன் செப்.,12ம் தேதி மதுரை சென்றார்.
மீண்டும் 14ம் தேதி இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 126 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. இது குறித்து பிரபு புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் சி.சி.டி.வி., காட்சி, அலைபேசி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். எஸ்.பி., அபிஷேக் குப்தா, டி.எஸ்.பி., லோகநாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
திருட்டு நடந்தது எப்படி வீட்டின் முன் பக்க இரும்பு கேட்டின் பூட்டு எளிதாக திறக்கும் வண்ணம் உள்ளது. முன்பக்க மரக்கதவை பூட்டி சாவியை மீட்டர் பாக்ஸ் உள்ளே வைத்து செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட நபர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று அறையினுள் புகுந்து நகையை திருடி சென்றுள்ளனர்.