Crime, law and justice
கோவில் சொத்துக்கள் விபரங்களை 3 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: 'தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துக்கள், வாடகை விபரங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை, மூன்று மாதங்களுக்குள் இணையதளத்திலும், கோவில் அறிவிப்பு பலகைகளிலும் வெளியிட வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மந்தைவெளிப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், 'சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சில விபரங்களை கேட்டு விண்ணப்பித்தார். இந்த மனுவை விசாரித்த, தகவல் ஆணையர் இளம்பரிதி வெளியிட்ட உத்தரவு:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பின்வரும் விபரங்களை 90 நாட்களுக்குள், பொதுமக்கள் பார்வையில் படுமாறு, வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
*'வரவு - செலவு' கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், அறங்காவலர் குழு தீர்மானங்கள்
* நடை திறக்கும் நேரம், பூஜை காலங்கள், திருவிழாக்கள் மற்றும் ஸ்தல வரலாறு உள்ளிட்ட 11 தகவல்களை, கோவில்கள் மற்றும் அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் வகையில், பதாகைகள் அல்லது கோவிலின் அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும்.
இந்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பான ஆவணங்களுடன், அறநிலையத் துறை கமிஷனர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரும், இணை ஆணையருமான தங்கம், நவ., 30ம் தேதி, மாநில தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.