ஊட்டி கேரட், பீன்ஸ் விலை வீழ்ச்சி
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் ஊட்டி கேரட், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளின் விலை 30 சதவீதம் விலை சரிந்து விற்பனை ஆகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. மார்க்கெட்டிற்கு கேரட், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மாவட்ட விவசாயிகளும் கொண்டு வருகின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு, இந்த காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம் ஊட்டி கேரட், பீன்ஸ் விலை கடும் வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது. அதன் பின் சித்தரைக்கனி முதல் கேரட், பீன்ஸ் விலை தொடர்ந்து உயர்ந்து ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை ஆகி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே கேரட், பீன்ஸ் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து ரூ.30 முதல் ரூ.40 வரை தான் விற்பனை ஆகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருக்கும் ராஜா கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு ஆண்டு முழுவதும் ஊட்டி கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகளின் வரத்து இருக்கும். தற்போது மார்க்கெட்டிற்கு மைசூர், பெங்களூர் கேரட், பீன்ஸ், பீட்ரூட்கள் வருகின்றன. ஊட்டி மலைக்காய்கறிகள் 70 வண்டிகள் வரத்து வந்தால், மைசூர், பெங்கரூர் காய்கறிகள் தலா 10 வண்டிகள் வரத்து வருகின்றன. இதனால் மார்க்கெட்டிற்கு வறட்சியிலும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை ஆன ஊட்டி கேரட், தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகிறது. பீன்ஸ் ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனை ஆன நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.55 வரை விற்பனை ஆகிறது. முட்டைகோஸ் ரூ.25 வரை விற்பனை ஆன நிலையில் ரூ.7 முதல் ரூ.15 வரை தான் விற்பனை ஆகிறது. ஊட்டி மலைக்காய்கறிகள் விலை 30 முதல் 40 சதவீதம் குறைந்துள்ளது.
மைசூர், பெங்களூர் காய்கறிகள் ஊட்டி காய்கறிகளை விட ஒரு கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ.15 வரை விலை குறைந்து தான் விற்பனை ஆகிறது. ஊட்டி கேரட், பீன்ஸ் மற்றும் மலைக்காய்கறிகளுக்கு என்றுமே மவுசு உள்ளது. இதற்கு சுவையும், காய்கறிகளின் நிறமும் ஒரு முக்கிய காரணம். கேரளா வியாபாரிகளின் விருப்ப தேர்வாக ஊட்டி காய்கறிகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.