Politics
விஜய் கட்சியில் கோஷ்டி மோதல்! - சேலம் பரபரப்பு !

சேலம் வடமேற்கு மாவட்டத்தில் த.வெ.க. கோஷ்டி சண்டையால் இரு துருவங்களாக பிளவுபட்டுள்ள நிலையில், நிர்வாகிகள் இடையே யான மோதலை தூண்டிவிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சைலண்டாக ரசிப்பதாக அதிருப்தி கிளம்பியுள்ளது.
த.வெ.க.வில், சேலம் வடமேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் செந்தில்குமார். இவர் தனது தலைமையில், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தவும், மறுநாள் மாலை ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தவும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்திருந்தார்.
இந்நிலையில் சங்ககிரி த.வெ.க. ந.செ. மணிகண்டன், வடமேற்கு மா.செ. தலை மையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக் கக்கூடாது என்று காவல்துறைக்கு கைப்பட கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், 'கட்சித் தலைமை உத்தரவின்படி மகுடஞ்சாவடியில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படும். சங்ககிரியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித் தால் பொதுமக்கள், கழகத் தோழர்கள், தோழிகள் மத்தியில் சலசலப்பு ஏற்படும். சங்ககிரியில் கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டாம்' என்று தெரிவித்திருந்தார்.
ஓமலூரில் வடமேற்கு மா.செ. செந்தில்குமார் தலைமையில் கூட்டம் நடத்தவும், அத்தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆதரவாளரான அதியமான் எதிர்ப்பு தெரிவித்தார். அதேநேரம், மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூரில் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது.
வடமேற்கு மாவட்ட த.வெ.க.வில் பூடகமாக இருந்த கோஷ்டி சண்டை, இந்த சம்பவத்தின் மூலம் வெட்டவெளிச்சமானது. இது தொடர்பாக, சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.வில் இணைந்த பிரமுகர்கள் சிலர் நம்மிடம் பேசினர். "த.வெ.க.வில் கட்சிக்கட்டுப்பாடு, புரோட்டாகால் மரபுகள் எதுவும் இல்லை. ஒ.செ., ந.செ., பொறுப்பிலிருக்கும் சின்னப்பசங்ககூட வடமேற்கு மா.செ.வுக்குக் கட்டுப்படுவதில்லை. போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் மத்திய மா.செ.வுமான விஜய் தமிழன் பார்த்திபன், பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தங்க நாணயச் சீட்டு திட்டங்களை நடத்திவருகிறார். கட்சி நிர்வாகிகள் பலரும் அவரிடம் சீட்டுத்திட்டத்தில் பணம் செலுத்தி வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலின்போது வடமேற்கு மா.செ. செந்தில்குமாரிடம் விஜய் தமிழன் பார்த்திபன் தேர்தல் நிதியாக 25 லட்சம் ரூபாய் கேட்டு, தினமும் போன் செய்து கொண்டிருந்தார். அவரால் உடனடியாக பணம் புரட்ட முடியாத தால், ஏற்கனவே தங்க நாணய சேமிப்புத் திட் டத்தில் 15 லட்சம் ரூபாய் செலுத்தியிருப்பதாகவும், அந்தப் பணத்தை முதல் தவணையாக வைத்துக் கொள்ளுங்கள். மீதிப்பணத்தை சில நாட்களில் ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருந்தார். இந்த இடத்தில்தான் விஜய் தமிழன் பார்த்தி பனுக்கு, வடமேற்கு மா.செ. மீது மனக்கசப்பு ஏற் பட்டது. அடுத்து, ஓமலூர் தொகுதியில் போட்டி யிட்ட தொழிலதிபர் அதியமானை, முதலில் சங்ககிரி தொகுதியில் நிறுத்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் முடிவு செய்திருந்தார். இதற் காக, அதியமான் தரப்பிலிருந்து அமைச்சருக்கு வெயிட்டான ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறின. வடமேற்கு மா.செ. செந்தில்குமார் சங்ககிரி அல்லது ஓமலூரில் சீட் பெற்றுவிடக்கூடாதெனத் திட்டமிட்டு காய் நகர்த்தினார். ஆனால் கட்சி மேலிடத்திலுள்ள ஒருவர் மூலமாக செந்தில்குமார், சங்ககிரியில் போட்டியிட சீட் பெற்றார். தன்னை மீறி சீட் பெற்றுவிட்டதால், அப்போது முதல் அவரை வெளிப்படையாகவே ஓரங்கட்டத் தொடங்கினார் விஜய் தமிழன் பார்த்திபன்.
இதன் தொடர்ச்சியாகத்தான், வடமேற்கு மா.செ., ஏற்பாடு செய்திருந்த அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் அமைச்சர். தனது ஆதரவாளர்களை செந்தில்குமா ருக்கு எதிராகக் கொம்பு சீவிவிட்டு, சைலண்டாக ரசிக்கிறார். விரைவில் அவருடைய இடத்திற்கு தற்போது இ.செ. ஆகவுள்ள இளம்பரிதியை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளார்.'' என்கிறார்கள் உட்கட்சி விவரப்புள்ளிகள்.
இந்த விவகாரம் குறித்து, அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் ஆதரவாளரும், வடமேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளருமான ஆதிகேசவனிடம் கேட்டபோது, "வடமேற்கு மா.செ. செந்தில்குமார் சங்ககிரியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது குறித்து நகர செயலாளர் மணிகண்டனிடம் முன்கூட்டியே அனுமதி கேட்கவில்லை. ந.செ. பிஸியாக இருந்தால் என்னிடம் கேட்டிருக்க வேண்டும். அவர் தன்னிச் சையாக கூட்ட ஏற்பாடு களைச் செய்தது தவறு.
செந்தில்குமாரின் நடவடிக்கைகள் சரி யில்லாததால் சங்ககிரி, ஓமலூர் தொகுதிகளில் உள்ள 23 ஒன்றிய, பேரூர், கிளை, நகரச் செயலாளர் களில் 22 பேர் என்னுடன் இருக்கிறார்கள். நாங்கள் கையெழுத்துப் போட்டு தலைமைக்கு அனுப்பி னால் உடனே அவருடைய பதவி காலியாகி விடும்'' என்றார். இது ஒருபுற மிருக்க, சங்ககிரி ந.செ. மணிகண்டனோ, "வட மேற்கு மா.செ. செந்தில்குமார் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் குறித்து எனக்கு தகவல் சொன்னது உண்மைதான். ஆனால், சங்ககிரி தொகுதி பொறுப்பாளர் இளம்பரிதி சொல் வதைத்தான் நான் கேட்க முடியும்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
த.வெ.க.வுக்கு வேண்டுமானால் புஸ்ஸி ஆனந்த் பொ.செ.வாக இருக்கலாம். ஆனால், சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்தி பன்தான் உச்ச அதிகார மையம் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். "முளைத்து மூணு இலை விடல. அதற்குள் கோஷ்டி சண்டையா?' என்கிறார்கள் பிற கட்சிகளிலிருந்து த.வெ.க.வுக்கு தாவிய சீனியர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)