மேற்குவங்க பெண், குழந்தையை கொலை செய்தது ஏன்? கொலையாளி ‘பகீர்’ வாக்குமூலம்

பாலக்காடு: கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே இளம்பெண் மற்றும் பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில், அப்பெண் கர்ப்பமாக இருந்ததால் கொலை செய்ததாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே, கடந்த 6ம் தேதி புதூர் சீரக்கடவு பகுதியில், பவானி ஆற்றில் மூன்று சாக்கு மூட்டைகள் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அவற்றை மீட்டு சோதனை யிட்டபோது, பெண் மற்றும் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலைகள் மற்றும் உடல் பாகங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்வதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும் இந்த கொலையை செய்தது மேற்கு வங்க மாநிலம் அலிப் பூர்துவார் சோவாகஞ்சன் பகுதியை சேர்ந்த புரோவத் தாஸ், 38, என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மேற்குவங்கத்தில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார், நேற்று சம்பவ இடத்திற்கு புரோவத் தாசை அழைத்து வந்து, ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனு முர்மு. அவரது மனைவி புரோணிதா ஸ்வர்ணாவுக்கு, புரோவத் தாஸ்க்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால், அப்பெண்ணையும், அவரது மூன்றரை வயது குழந்தை ஜோஹிதாவையும், புரோவத் தாஸ் கேரளாவுக்கு அழைத்து வந்துள்ளார். ஏஜென்ட் வாயிலாக, அட்டப்பாடி புதூர் சீரக்கடவு பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தனர்.
கடந்த, 3ம் தேதி கோட்டத்தறை பழங்குடியினர் தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, புரோணிதா ஸ்வர்ணா கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புரோவத்தாஸ், ஸ்வர்ணா மற்றும் அவரது குழந்தையை கொடூரமாக கொலை செய்து, இருவரது தலைகளையும் துண்டித்து, உடல்களை தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி, பவானி ஆற்றில் வீசியுள்ளார். மறுநாள் காலை தோட்ட மேற்பார்வையாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மேற்கு வங்கத்துக்கு தப்பி சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.