Politics
இதிலும் அரசியலா l விருதுநகரில் தனி தீக்காய சிகிச்சை பிரிவு அமைப்பதில் தாமதம்: பல்வேறு சிறப்பு டாக்டர்கள் இருந்தும் கைவிடுவதா

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தனியாக 30 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு துவங்க தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது த.வெ.க., ஆட்சியில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. மக்கள் பிரச்னையில் அரசியல் செய்வதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடி விபத்துக்களின் போதும் காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக சாத்துார், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் இருந்து எப்போதும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இங்கு காயமடைந்தவர்களுக்கு எலும்பு முறிவு, நரம்பியல், தீக்காயம் என பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் உள்ளனர். அறுவை சிகிச்சை செய்ய தேவையான மருத்துவர்களும் உள்ளனர்.
ஆனால் இத்தனை வசதிகள் இருந்தும் 4 ஆண்டுகளாக தீக்காயத்திற்கு 30 படுக்கைகளுடன் கூடிய தனி சிகிச்சை பிரிவு துவங்கப்படாமல் இருந்தது. அவசர சிகிச்சை பிரிவுக்கு எதிரே உள்ள பழைய கட்டடத்தை இடித்து தனி தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்க தி.மு.க., ஆட்சியின் இறுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு துவங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு தீக்காய சிகிச்சை பிரிவு துவங்க மற்ற துறை மருத்துவர்கள் இல்லை.
தீக்காய சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டாலும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கே காயமடைந்தவர்கள் மாற்றப்படுவார்கள். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எங்கு கிடைக்கும், நோயாளிகளின் நலனை பார்க்காமல் அரசியலில் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவை அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து பட்டாசு விபத்துக்களில் காயமடையும் தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும்.