Lifestyle and human interest
விவசாயம் என்பது வருமானம் மட்டுமா? - நஞ்சில்லா உணவு நம்பிக்கை அளிக்கும் இளைஞர்!

‘விவசாயம் இனி பிழைப்புக்கு உதவாத தொழில்’, ‘எல்லா உணவும் நஞ்சாகிவிட்டது’ என்று பலரும் விரக்தியடைந்திருந்த நிலையில் வெளிச்சத்துக்கு வந்தார் நம்மாழ்வார். இயற்கை வேளாண் விவசாயம், ரசாயனக் கொல்லிகளின் பாதிப்பு என்று அவர் மேற்கொண்ட பிரசாரங்கள் பெரும் இளைஞர்கள் கூட்டத்தை வசப்படுத்தியது. இப்போதும் ‘ஐடி வேலையை விட்டு விவசாயத்துக்கு வந்தேன்’, ‘வெளிநாட்டிலிருந்து திரும்பி மதிப்புக்கூட்டல் செய்கிறேன்’ என்று பலர் சொல்வதற்குப் பின்னால் நம்மாழ்வாரின் தாக்கம் ஏதேனும் ஒரு வகையில் இருக்கும். அவர்களில் ஒருவர்தான் விஜய்.
‘‘புதுக்கோட்டை மாவட்டம், தெத்து வாசல்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகளுடன் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். என் பெற்றோர் விவசாயத்தால் நிறைய சிரமப் பட்டவர்கள். இதனால் நாங்கள், நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே விரும்பினார்கள். கோயம்புத்தூரில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைத்தார்கள். ஆனால், படிப்பை முடித்தபிறகு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை. நமது குடும்பம் வேளாண்மையைச் சார்ந்து இயங்குகிறது. நாம் ஏன் மற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் ஊருக்கே வந்தேன்’’ என்கிற விஜய்க்கு, வீட்டிலும், ஊரிலும் ராஜமரியாதையா கிடைத்திருக்கும்? நாம் யூகிப்பதுதான் நடந்துள்ளது.
‘‘ஆரம்பத்தில் விமர்சனங்களை மட்டுமே சந்தித்தேன். ஆனாலும் கலங்கவில்லை. எங்கள் தோட்டத்தில் கரும்பு, வாழை, தர்பூசணி போன்ற பணப்பயிர்களையே பெரும்பாலும் சாகுபடி செய்தார்கள். ரசாயன உரங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தபோது காய்கறிகளையே பயிரிட விரும்பினேன். வீடுகளில் அதிகம் பயன் படுத்தப்படும் உணவுப்பொருளான காய்கறி களில்தான் ரசாயனமும் அதிகம் என்பதால் அந்த முடிவை எடுத்தேன். ஆரம்பத்தில் ‘இது முடியாது’ என்றார்கள். எங்கள் நிலத்தின் விளைச்சலே விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலாக மாறியது...’’
‘‘விவசாயம் என்பது விளைச்சலையும் வருமானத்தையும் மட்டுமே சார்ந்தது அல்ல. உணவையும், ஆரோக்கியத்தையும், சுற்றுச் சூழலையும் உள்ளடக்கியது.
ரசாயன உரங்களால் மண்ணில் வாழும் உயிரினங்கள், நீர்நிலைகள், நிலத்தடி நீர் என இயற்கையின் பல்வேறு கூறுகளும் பாதிக்கப் படுகின்றன. இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களைப் பயன்படுத்தித்தான் உற்பத்தி செய்ய வேண்டுமா என்ற கேள்வியே ரசாயனமில்லா இயற்கை விவசாயத்தை நோக்கி அழைத்துச் சென்றது’’ என்பவர், நம்மாழ்வார் ஏற்படுத்திய தாக்கம் பற்றி உணர்ச்சி பொங்க விவரிக்கிறார்.
‘‘பயிர்களின் வளர்ச்சியை இயற்கையாக ஊக்கப்படுத்துவது, பூச்சிகளைக் கட்டுப் படுத்துவது, மண்ணின் வளத்தை மீட்டெடுப்பது எனத் தேடத் தொடங்கியபோது, இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் கருத்துகள்தான் வழிகாட்டியாக அமைந்தன. நம்மாழ்வார் உருவாக்கிய ‘வானகம்’ என்ற இடம், என்னைப் போல பல இளைஞர்களை ஈர்த்த மையமாக இருந்தது. அங்கு இயற்கை வேளாண்மை தொடர்பான பயிற்சிகள் பெற்றேன். அத்துடன் பல முன்னோடி விவசாயி களைச் சந்தித்து அவர்களிடமிருந்தும் கற்றுக் கொண்ட அனுபவங்களையும் என்னுடைய நிலத்தில் செயல்படுத்தினேன்...’’
‘‘பல ஆண்டுகளாக ரசாயன உரங்கள் பயன் படுத்தப்பட்ட நிலத்தை இயற்கை வேளாண்மைக்கு மாற்றுவது எளிதானதாக இருக்கவில்லை. நிறைய தோல்விகளை எதிர் கொண்டேன். உதாரணமாக, செவ்வாழைச் சாகுபடியில் 800 வாழைக்கன்றுகளில் 200 மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. இடுபொருள்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாததால் தோல்வி ஏற்பட்டது. ஆனால், தவறுகளைப் புரிந்துகொண்டு, மீண்டும் முயற்சி செய்தேன். அடுத்த ஆண்டு அதே செவ்வாழைச் சாகுபடியில் சிறப்பான லாபத்தைப் பெற்றேன்’’ என்கிறார்.
இயற்கை வேளாண்மையுடன் விதைகள் விற்பனை, மதிப்புக்கூட்டல் செய்வது, தமிழகம் முழுவதும் கண்காட்சிகளில் அரங்குகள் அமைப்பது போன்றவற்றையும் செய்கிறார் விஜய்.
‘‘நம்மாழ்வார் அய்யாவின் தாக்கத்தால் ‘தாயகம்’ என்ற பெயரை நானும் என் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துகிறேன். அதே பெயரில் என் பொருள்களை விற்பனை செய்கிறேன். என் தங்கை வித்யா இதற்குப் பக்க பலமாக இருக்கிறார். அவர் பி.காம் பட்டதாரி. தோட்டத்து வேலைகளை நான் கவனித்துக் கொள்கிறேன். மற்ற வேலைகளை அவர் பார்த்துக் கொள்கிறார்’’ என்கிறார் பாசமுள்ள அண்ணனாக.
பசுமைப் பயணம் தொடரட்டும்!
