Politics
அரசு மருத்துவமனையில் 38 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு துவங்கும் திட்ட பணிகள் கிடப்பில் போட்ட த.வெ.க., அரசு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தீக்காயம் சிகிச்சைக்கு 38 படுக்கைகளுடன் தனி பிரிவு துவங்க கடந்தாண்டு திட்ட பணிகள் நடந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் தீக்காயமடைந்தவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பட்டாசு தயாரிப்பு பணிகள் துவங்கி முடிவடைவதற்குள் பல விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறப்பு மருத்துவர்கள் உள்ள விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்தாண்டு தேசிய சுகாதார இயக்கத்தின் நிதியில் இருந்து 9 ஆயிரம் சதுர அடியில் ரூ. 1.50 கோடியில் 38 படுக்கைகளுடன் தீக்காயத்திற்கான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க திட்டப்பணிகள் நடந்தது.
குளிரூட்டப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர், செவிலியர், பணியாளருக்கு தனி அறை, கழிப்பறை, குளியலறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகள் தனி கவனத்துடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் நடந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு தனிப்பிரிவு துவங்க த.வெ.க., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இங்கு பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மற்ற துறை சிறப்பு மருத்துவர்கள் இல்லை.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே தி.மு.க., ஆட்சியில் பரிந்துரை நடவடிக்கை எடுக்கப்பட்ட தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்க த.வெ.க., அரசு நடவடிக்கை எடுத்து பட்டாசு தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும்.